'நிறை மாத கர்ப்பிணி'... 'போகும் வழியில் நடந்த துயரம்'... 'போலீசாரை பதறவைத்த இளம் தம்பதி'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | May 11, 2020 06:57 AM

ஊரடங்கால் வேலை இன்றி பசியால் தவித்த நிறைமாத கர்ப்பிணி இளம் பெண், சொந்த ஊருக்கு நடைப்பயணமாக போகும்போது வழியில் நடந்த சம்பவம் அனைவரையும் பதறவைத்துள்ளது.

Woman gives birth on roadside in madya Pradesh Goes on to Cover 160 Km

நாசிக்கில் குடும்பத்தினருடன் வேலை செய்து வந்தநிலையில், ஊரடங்கால் வேலை இல்லை. கையில் இருந்த காசும் கரையத் தொடங்கிவிட்டது. வேறு வழியில்லாமல்  9 மாத கர்ப்பிணியான சாகுந்தலா தன் கணவருடன் மகாராஷ்டிரா நாசிக்கில் இருந்து தனது சொந்த ஊரான மத்தியப் பிரதேசம் சாட்னாவுக்கு நடந்து செல்ல முடிவு செய்துள்ளார்.  அதன்படி 16 பேருடன் நடைப்பயணத்தை தொடங்கியுள்ளனர்.

ஆனால் போகும்வழியில் 70 கிலோமீட்டர் நடந்துசென்ற நிலையில், மே 5-ம் தேதி சாகுந்தலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது வேறுவழியில்லால் சாகுந்தலாவுடன் சாட்னாவுக்கு பயணப்பட்ட 4 பெண்களின் உதவியுடன் தேசிய நெடுஞ்சாலையிலேயே அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.  நல்லபடியாக குழந்தையை பெற்றெடுத்தாலும், ஓய்வு எடுக்காமல் ஒரு மணி நேரத்திலேயே அந்தப் பிஞ்சுக்குழந்தையை கையில் அணைத்தபடி மீண்டும் நடக்கத் தொடங்கியுள்ளார் சாகுந்தலா.

சாகுந்தலா மாநில எல்லையை அடைந்த போது கையில் குழந்தையுடன் அவர் கடந்து செல்வதை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் கவனித்துள்ளனர். பணியில் இருந்த பெண் காவல் அதிகாரி கவிதா கணேஷ், சாகுந்தலாவை அழைத்து விசாரித்துள்ளார். ஊரடங்கால் உணவின்றி தவித்ததும் சொந்த ஊருக்கு நடந்து செல்லும் வழியில் தனக்கு குழந்தை பிறந்த விவரத்தை கண்ணீருடன் விவரித்துள்ளார்.

அவரது பேச்சை கேட்ட காவலர்களுக்கு ஒரு நிமிடம் என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்படியே விக்கித்து நின்றனர். சாகுந்தலா தன் பிஞ்சுக்குழந்தையுடன் 160 கிலோ மீட்டர் நடந்து வந்ததை அறிந்து பதறிப்போயுள்ளனர். இதனையடுத்து அவர்கள் அனைவருக்கும் தண்ணீர், உணவு ஆகியவற்றை காவல்துறையினர் ஏற்பாடு செய்துக்கொடுத்துள்ளனர்.

சாகுந்தலாவுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தையும் வெறும் கால்களுடன் இவர்களுடன் நடந்து வந்துள்ளது. அந்த சிறுமிக்கு காவலர்கள் காலணிகளை வாங்கிக்கொடுத்தனர். இதனையடுத்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான பேருந்து வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. இதுகுறித்து பேசிய சாகுந்தலாவின் கணவர், ‘ஊரடங்கு காரணமாக எனக்கு வேலையில்லை. நாசிக்கில் இருந்த நிறுவனங்கள் அனைத்தும் மூடியிருக்கிறது. நாங்கள் அனைவரும் வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வந்தோம்.

எங்களிடம் சாப்பிடுவதற்கு கூட எதுவும் இல்லை. இங்கே எங்களுக்கு தெரிந்தவர்கள் யார் இருக்கிறார்கள் யார் எங்களுக்கு உதவுவார்கள். அதனால்தான் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டோம். வரும் வழியில் என் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஒரு சீக்கிய குடும்பத்தினர்தான் தேவையான துணிகள் மற்றும் பொருள்களை வழங்கி உதவிப்புரிந்தனர்’ என கலங்கிய கண்களுடன் கூறியது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.