'கொரோனா மருந்தை கண்டுப்பிடிக்க முயற்சித்தபோது'... 'உயிரிழந்த சென்னை மேனேஜர்’... ‘பரிசோதனையில் புதிய திருப்பம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 10, 2020 07:03 PM

சென்னையில் கொரோனா வைரசுக்கான மருந்தை கண்டுப்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, பலியான பிரபல இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

chennai man died while find to medicine tests positive

சென்னை பெருங்குடி பகுதியை சேர்ந்தவர் 47 வயதான சிவநேசன். இவர், சுஜாதா பயோ டெக் கெமிக்கல் நிறுவனத்தின் பொது மேலாளராக கடந்த 27 வருடங்களாக பணியாற்றி வந்தார். இவரும், அந்நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் ராஜ்குமாரும் நண்பர்களாவர். ஏற்கனவே, இந்த நிறுவனத்தின் இருமல் மருந்து, ஷாம்பு எனப் பல தயாரிப்புகளின் பார்முலாக்களை சிவநேசன் கண்டுப்பிடித்தவர் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இருவரும் சேர்ந்து, திநகரில் உள்ள டாக்டர் ராஜ்குமாரின் வீட்டில் வியாழக்கிழமை, கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுப்பிடிக்கலாம் என முயற்சியில் இறங்கியுள்ளனர். அப்போது உரிய முன் அனுமதி பெறாமலும், பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காமலும் மருந்து கண்டுப்பிடிக்கும் முயற்சியில், சோடியம் நைட்ரேட் மற்றும் நைட்ரிக் ஆக்சைடு கலவையில் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் மருந்தை தயாரித்து, அது வெற்றிபெற்றால், பெரிய லெவலுக்கு வந்துவிடலாம் என நினைத்து அந்த கரைசலை இருவரும் குடித்துள்ளனர்.

குடித்த சிறிது நேரத்தில் இருவரும் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் குடும்பத்தாரால் சேர்க்கப்பட்டனர். ஆனால் மூச்சுத்திணறல் அதிகமாகி பொது மேலாளர் சிவனேசன் உயிரிழந்த நிலையில் ராஜ்குமார் சிகிச்சையில் தற்போது நலம் பெற்று வருகிறார். இந்த சூழலில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உயிர் இழந்ததால் அவருக்கும் கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில் அவரது உடலுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் உயிரிழந்த சிவனேசனுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், சிவனேசன் வேண்டுமென்றே கொரோனா  வைரசை தன் உடலில் செலுத்திக்கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.  சிவனேசனுடன் இணைந்து மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட டாக்டர் ராஜ்குமாரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேலும் அனுமதியின்றி மருந்து தயாரித்த விவகாரம் தொடர்பாக விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.