"கண்ணிமைக்கும் நொடியில உடல்கள் சிதறிப் போனது!.. கண்ணை மூடினா அந்த காட்சிதான்!".. 16 பேர் இறந்த ரயில் விபத்தில் உயிர் தப்பியவரின் 'உருகவைக்கும்' வாக்குமூலம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | May 10, 2020 11:34 PM

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் ஆங்காங்கு வெளி மாநிலத்துக்கு புலம்பெயர்ந்து பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் வேலை மற்றும் வருமானமின்றி சமாளிக்க முடியாததால் தத்தம் சொந்த ஊர்களுக்கு நடை பயணமாகவே புறப்பட்டுச் சென்றனர்.

cant forget that, says accident survivor of train tragedy maharashtra

அப்படி மகாராஷ்டிராவில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில் இருப்புப் பாதை வழியாக மத்திய பிரதேசத்துக்கு நடந்தே செல்ல முடிவு செய்து சென்றுகொண்டிருந்தபோது, 36 கி.மீ நடந்த அந்த தொழிலாளார்கள் அவுரங்காபாத்-ஜல்னா ரயில் பாதையில் உடல் அசதி காரணமாக ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கி இருந்த போது காலை 5.30 மணி அளவில் அவ்வழியே வந்த சரக்கு ரயில் அவர்களின் மீது ஏறியதில் 16 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.‌ நாட்டையே கலங்கவைத்த இந்த விபத்து பற்றி இந்த சரக்கு ரயில் விபத்தில் உயிர் தப்பிய சிவமான் சிங் ஒன்பவர் கண்ணீருடன் அளித்த பேட்டி பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

இந்த கோர சம்பவம் பற்றி பேசிய அவர், "எல்லாம் சில வினாடிகளிலேயே நடந்து அரங்கேறி விட்டது. நான் கால் வலி காரணமாக தண்டவாளத்தில் இருந்து இறங்கி தரையில் படுத்துவிட்டேன். மற்றவர்கள் தண்டவாளத்தில் படுத்துறங்கினர். அந்த 16 பேரின் உடல்களும் சிதறி தூக்கி எறியப்பட்ட அந்த சம்பவம் என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது. அந்த காட்சியை என்னால் மறக்கவே முடியாது. எல்லாமே கண் இமைக்கும் நேரத்திற்குள் நடந்து முடிந்துவிட்டது.  அந்த கோரமான காட்சி இன்னும் என்னை வேதனைப்படுத்தி கொண்டே இருக்கிறது. கண்மூடி தூங்கவும் முடியவில்லை. கண்களை மூடினால் அந்த காட்சிதான் எனக்கு என் கண்முன்னே வந்து போகிறது. இந்த சம்பவத்தை பார்த்த எனது குடும்பத்தினர் என்னை செல்போனில் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றனர். என்னுடைய செல்போனில் சார்ஜ் இல்லாததால், அவர்களை என்னால் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. விபத்து நடந்து முடிந்தபின் அதிகாரிகளிடம் சென்று ஒவ்வொருவரையும் அடையாளம் காண்பித்து அவர்களின் கேள்விக்கு பதில் அளித்து கொண்டு இருந்தேன்" என்று சிவமான் சிங் தெரிவித்துள்ளார்.