'3 பேர் உயிரிழப்பு!'.. '15 குழந்தைகள், 2 கர்ப்பிணிகள், 5 மருத்துவர்கள்!'.. தமிழகத்தில் இன்று (மே-10) கொரோனா பாதித்தவர்கள் முழுவிபரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | May 10, 2020 06:30 PM

தமிழகத்தில் இன்று (மே 10) மட்டும் குழந்தைகள், மருத்துவர்கள், கர்ப்பிணிகள், மற்றும் காவலர்கள் உட்பட 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,204 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது.

TN Covid19 updates May10th கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை

தமிழகத்தில் இன்று மட்டும் 13 ஆயிரத்து 367 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதனால் இதுவரை தமிழகத்தில் 53 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்ட 2 லட்சத்து 43 ஆயிரத்து 37 மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 669 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 3,839 ஆக உள்ளது.  

இன்று ஒரே நாளில் தூய்மைப் பணியாளர் உட்பட 3 பேர் உயிரிழந்ததை அடுத்து, கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,204 ஆக உயர்ந்துள்ள நிலையில் இவர்களுள் இன்று மட்டும் 135 பேரும், மொத்தமாக இதுவரை 1959 பேரும் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகளில் 5 ஆயிரத்து 195 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தவிர, அடுத்த 6 நாட்கள் வரை கொரோனா பாதித்தவர்களி எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என்றும் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.