“கொரோனாவை எங்களால கட்டுப்படுத்த முடியாம போனதுக்கு இதான் காரணம்!” - ஒருவழியாக உண்மையை உடைத்த மூத்த சீன அதிகாரி!

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்

By Siva Sankar | May 10, 2020 06:53 PM

சீனாவின் வுஹான் நகரத்தில் தொடங்கி கொரோனா வைரஸ் இன்று ஒட்டு மொத்த மனித குலத்தையும், தன்னுடைய கோரப்பிடியில் வைத்துள்ளது. சர்வதேச அளவில் 41 லட்சத்தை தாண்டி விட்ட கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2.8 லட்சத்தை நெருங்கி உள்ளது.

weaknesses in China\'s public health system, Senior official Li Bin

இதனையடுத்து கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் உலகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கங்கள் சர்வதேச அளவில் பொருளாதார பாதிப்புகளை உண்டாக்கி உள்ளன. இந்த நிலையில், இந்த மொத்த பாதிப்புக்கும் சீனாதான் காரணம் என பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், சீனாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டபோது அதனை முறையாக அணுகாமல் அலட்சியமாக செயல்பட்டதாகவும், அதனால்தான் தற்போது உலகம் பெரும் விலையைக் கொடுத்துக் கொண்டிருப்பதாகவும் சீனாவை உலக நாடுகள் கடுமையாக விமர்சித்தன.

இதனிடையே கொரோனா என்னும் கொடிய வைரஸ் உருவான சமயத்தில் தங்கள் நாட்டில் பலவீனமாக இருந்த சுகாதார அமைப்பின் காரணமாகத்தான் அதனை முறையாக கையாளவில்லை என்று சீனாவின் தேசிய சுகாதார மையத்தின் துணை இயக்குனர் லி பின் தெரிவித்துள்ளது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. முன்னதாக கொரோனா சீனாவில் பரவத் தொடங்கியது முதலே, தற்போதுவரை உலக சுகாதார அமைப்புகளுடனும், பிற நாடுகளுடனும் உடனுக்குடன் அதுபற்றி பகிர்ந்தும் ஆலோசனை செய்தும் வருவதாக சீனா ஒருபுறம் கூறிவர, இன்னொருபுறம் லீ பின்னின் இந்த பேச்சு, அந்த அரசின் பலவீனத்தையும் சீன அரசு செய்த பிழையையும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் படியாக உள்ளதாக சர்வதேச அளவில் பார்க்கப்படுகிறது.

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில், பத்திரிகையாளர்களிடையே இதுபற்றி பேசிய லி பின்,  “சீனாவின் ஆளுகை திறனுக்கு சோதனையாக கொரோனா வைரஸ் பரவல் அமைந்து விட்டது. பொது சுகாதார அமைப்புகள், சுகாதாரம் மற்றும் அவசர நிலைக்கு பதிலளிக்கும் பிற அம்சங்களிலும் சீனாவின் பலவீனம் மற்றும் குறைபாடுகளையே இது வெளிப்படுத்துகிறது. வருங்காலத்தில் சீனாவில் பொது சுகாதார அமைப்பு மையப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த மற்றும் திறமையான அளவிலான அமைப்பாக உருவாக்கப்படும். எதிர்காலத்தில் எந்த ஒரு பொது சுகாதார நெருக்கடிக்கும் விரைந்து திறமையான வகையில் பதில் அளிக்கும் அமைப்பாகவும் அது இருக்கும். பொதுசுகாதாரம், முறையான தரவுகளும், செயற்கை நுண்ணறிவுடன் கூடிய நவீனமயமாக்கப்பட்ட நோய்த் தடுப்பு முறைகளும் அந்த அமைப்பால் மேம்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.  சர்வதேச அளவில் கிறுகிறுக்க வைத்த இந்த சீன சுகாதாரத் துறை மூத்த அதிகாரியின் பேச்சு வைரஸை விடவும் வேகமாக பரவி வருகிறது.