யூடியூப் வியூஸ் -யை அதிகரிக்க ரயில் தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டரை வைத்த இளைஞர்..! பீதியை கிளப்பிய வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Aug 11, 2019 03:42 PM
யூடியூப்பில் பார்வையாளர்களை அதிகரிக்க ரயில்வே தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டரை வைத்து ரயில் மோதிய பிறகு வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ரேணிகுண்டாவை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பதி சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டா மண்டலம் ஏற்பேடு அடுத்த சென்னூறு என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராமி ரெட்டி. பிடெக் படித்துள்ள இவர் ஹதராபாத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் யூடியூப்பில் வீடியோ பதிவு செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என ராமி ரெட்டி முடிவு செய்துள்ளார். இதற்காக பொம்மைகள், கோழி, சைக்கிள் செயின், கேஸ் சிலிண்டர், பைக் போன்ற பல்வேறு பொருள்களை ரயில்வே தண்டவாளத்தில் வைத்து ரயில் வரும் வரை காத்திருப்பார். தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் மீது ரயில் ஏறி செல்லும் காட்சிகளை வீடியோ எடுத்து அவற்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்துள்ளார். இதுபோல் 43 முறை அவர் வீடியோ எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ராமி ரெட்டி யூடியூப்பில் பதிவிட்டிருந்த ஒரு வீடியோவில், ரயில் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் பைக் மீது ரயில் மோதும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து அந்த காட்சியில் காணப்பட்ட பைக்கின் பதிவுஎண்ணை ஆதாரமாக வைத்து நடத்திய விசாரணையில், இதுபோன்ற வீடியோக்களை பதிவிட்டு வந்தது பி.டெக் படித்த பட்டதாரி இளைஞர் ராமி ரெட்டி என்பது தெரியவந்தது. மேலும் யூடியூப்பில் தனக்கு அதிக பார்வையாளர்கள் வர வேண்டும் என்பதற்காக இதுபோன்ற வீடியோக்களை அந்த வாலிபர் எடுத்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர் சைக்கிள் செயினை தண்டவாளத்தில் வைத்து வீடியோ எடுத்த போது சைக்கிள் செயின் ரயில் சக்கரத்தில் சிக்கி இருந்தால் ரயில் கவிழ்ந்திருக்கும். அதேபோல் தண்டவாளத்தில் வைக்கப்பட்ட கேஸ் சிலிண்டர் வெடித்திருந்தால் மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டு ரயில் பயணிகள் பலர் உயிரிழந்திருக்க கூடும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ராமி ரெட்டியை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.