‘இத என்னால நம்ப முடியல’... 'இதுக்கு என் மனைவிதான் காரணம்'... 'இந்தியருக்கு அடித்த ஜாக்பாட்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Aug 05, 2019 01:00 PM
வேலையின்றி வறுமையில் தவித்த இந்தியருக்கு, துபாய் லாட்டரியில் இப்படியொரு ஜாக்பாட் அடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரிக்கலா விலாஸ். தனது மனைவி, இரு மகள்கள் உடன் ஐதராபாத் நகரில் வசித்து வந்தார். இவரது குடும்பம் வறுமையில் வாடி வந்ததால், அங்குமிங்கும் பணத்தைப் புரட்டி, துபாய்க்கு வேலை தேடி சென்றார். ஆனால் அங்கு எவ்வளவு முயன்றும், எந்தவொரு வேலையும் கிடைக்கவில்லை. இந்த சூழலில் அபுதாபியில் விற்கப்பட்டு வந்த லாட்டரியை வாங்க ஆசைப்பட்டார். ஆனால் தன்னிடம் போதிய பணம் இல்லாததால், உடனே தனது மனைவிக்கு போன் செய்து, ரூ.20,000 வாங்கி நண்பர் ரவியின் உதவியுடன் லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார்.
இதற்கிடையில் நீண்ட நாட்கள் ஆகியும் வேலை கிடைக்காததால், கடந்த 45 நாட்களுக்கு முன்பு, மீண்டும் இந்தியாவிற்கு திரும்பியுள்ளார். பின்னர் சொந்த கிராமத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த சனிக்கிழமை மாலை, ரிக்கலாவிற்கு போன் வந்துள்ளது. அப்போது லாட்டரியில் 15 மில்லியன் திர்ஹாம் விழுந்திருப்பதாக கூறியுள்ளனர். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.28.43 கோடி ஆகும். இந்த செய்தியை கேட்டு, ரிக்கலா இன்ப அதிர்ச்சி அடைந்தார். அவரால் உண்மையை நம்பவே முடியவில்லை.
இதுகுறித்து ரிக்கலா விலாஸ் பேசுகையில், ‘துபாயில் ஓட்டுநராக வேலை செய்தேன். அந்த சமயத்தில் தான் லாட்டரி வாங்கினேன். இதை வாங்க பணம் இல்லாததால், எனது மனைவி மூலம் வாங்கினேன். இந்த லாட்டரிக்கு பரிசு கிடைத்ததற்கு முழு காரணம் எனது மனைவி பத்மா தான்’ என்று மகிழ்ச்சியுடன் கூறினார். விவசாயம் மூலம், ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய்க்கும் குறைவாகவே வருவாய் ஈட்டி வந்த ரிக்காலாவின் குடும்பம், தற்போது கோடீஸ்வர குடும்பமாக மாறியுள்ளது.
