நிர்பயா குற்றவாளிகளின் கடைசி 'திக் திக்' நிமிடங்கள்... திகார் சிறையில் அதிகாலையில் நடைபெற்றது என்ன?...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Mar 20, 2020 08:16 AM

நிர்பயா குற்றவாளிகளின் கடைசிகட்ட மனுவும் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட பின்பு சிறை விதிமுறைகளுக்கு உட்பட்டு 4 பேரும் தூக்கிலிடப்பட்டனர்.

The Last Minutes of Nirbhaya Criminals in tihar jail

4 பேரையும் தூக்கிலிட மீரட் சிறையில் இருந்து பவன் ஜல்லாத் என்ற ஹேங்மேன் வரவழைக்கப்பட்டிருந்தார். கடந்த செவ்வாய் இரவு திகார் சிறைக்கு வந்து சேர்ந்த இவர், தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஒத்திகை பார்த்து தயார் நிலையில் இருந்தார்.

அதன்படி இன்று அதிகாலை சீக்கிரமாகவே ஹேங்மேன் எழுந்து குளித்து தயாராகி விட்டு சிறைத்துறை அதிகாரிகள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதையடுத்து, சிறைக் கண்காணிப்பாளரும், சிறையின் துணைக் கண்காணிப்பாளரும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கைதியின் செல்லுக்குச் சென்றனர். நீதிமன்றத்தில் மரண உத்தரவில் இருக்கும் வாசகங்களை குற்றவாளிகளின் தாய மொழியில் சிறை கண்காணிப்பாளர் வாசித்து காண்பித்தார்.

தொடர்ந்து குற்றவாளிகள் 4 பேருக்கும் மருத்துவ பரிசோதனைகள் முடிந்தன. அனைவரும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சிறை வளாகம் முழுவதும் மூடப்பட்டது. தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் வளாகம் வரை சிறை கதவுகள் திறக்கப்படவில்லை. குற்றவாளிகளுக்கு தேநீர் கொடுத்த போது அவர்கள் அருந்த மாட்டோம் என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து சிறை துணைக்கண்காணிப்பாளர் முன்னிலையில் குற்றவாளிகளின் உடைகள் மாற்றப்பட்டு, கைகள் முதுகுக்கு பின்னால் கட்டப்பட்டன. குற்றவாளிகள் 4 பேரும் தூக்கு மேடை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டனர்.

தூக்கு மேடை அருகே சிறை கண்காணிப்பாளர், மாஜிஸ்திரேட், மருத்துவ அதிகாரி ஆகியோர் இருந்தனர். கைதியின் அடையாளம் சரி பார்க்கப்பட்டதாகவும், அவருடைய தாய்மொழியிலேயே வாரண்டை படித்துக் காட்டியதகவும் சிறைக் கண்காணிப்பாளர் மாஜிஸ்ட்ரேட்டிடம் கூறினார்.

இதையடுத்து, குற்றவாளிகள் 4 பேரும் தூக்கு மேடையில் ஏற்றப்பட்டனர். மரண தண்டனை நிறைவேற்றுபவர், கைதிகளின் கால்களை இறுக்கமாகக் கட்டியபிறகு, முகத்தில் முகமூடியை அணிவித்தார். இதன்பிறகு தூக்குக் கயிறு கழுத்தில் சரியாக பொருத்தப்பட்டது. அதுவரை கைதிகளை பிடித்திருந்த சிறைக் கண்காணிப்பாளர்கள் அங்கிருந்து நகர்ந்து சென்றனர்.

இதன் பிறகு சிறைக் கண்காணிப்பாளர் சைகை காட்டியவுடன், ஹேங்மேன் பவன் ஜல்லாத்  நெம்புகோலை இழுத்தார். கைதிகள் நின்று கொண்டிருந்த பலகைகள் நகர்ந்ததும் 4 பேரும் தூக்கில் தொங்கினர். 4 பேரின் உடலும் அப்படியே அரைமணி நேரம் தூக்கில் தொங்கவிடப்பட்டது. பின்னர் குற்றவாளிகளின் உடல்களை பரிசோதித்து பார்த்து அவர்கள் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடும் செய்தி அறிந்து திகார் சிறை முன்பு ஏராளமான பொதுமக்கள் கூடினர். இதையொட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கவும், பொதுமக்களை கட்டுப்படுத்தும் வகையிலும் துணை ராணுவப்படையும் நிறுத்தப்பட்டிருந்தது.

திகார் சிறை வரலாற்றில் ஒரேசமயத்தில் 4 பேர் தூக்கிலிடப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை சிறைத்துறை அதிகாரிகள் எந்தவித தவறும் இன்றி வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கின்றனர்.

இந்தியாவில் 7 ஆண்டுகளுக்கு முன்பாக அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு நிர்பயா வழக்கில் 4 பேருக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Tags : #NIRBHAYA #DELHI #TIHAR #LAST MINUTES #CONVICTS #HANGING