என் 'புள்ளைய' அவங்க எப்படி அடிக்கலாம்...? 'சந்தையில்' ஊர்வலமாக இழுத்துச் சென்று... பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Jan 23, 2020 06:50 PM

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தின் மும்ப்ரா எனும் பகுதியில் சந்தை ஒன்று உள்ளது. இந்தச் சந்தையிலுள்ள கடை ஒன்றில் 14 வயதுச் சிறுவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை 50 ரூபாய் திருடியதாகக் கூறப்படுகிறது. அப்பகுதியில் கடை வைத்துள்ள மூன்று நபர்கள் இதைக் காரணம்கூறி அச்சிறுவனைத் தாக்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

\"The boy who was dragged into the market procession!\"

சிறுவனின் உறவினர் ஒருவர் இந்தச் சம்பவம் குறித்து பேசுகையில், ``அந்தச் சிறுவன் வழக்கமாக அவர்களின் கடைக்குச் செல்வான். சில நேரங்களில் உதவியும் செய்வான். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி அளவில் 50 ரூபாயைத் திருடியதாக அவன்மீது குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தனர்” என்றார்.

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்துள்ள சிறுவனின் சகோதரி, ``அருகில் உள்ள சலூன் ஒன்றுக்கு அழைத்துச் சென்று அவனை அடித்தனர். அவனைக் கட்டாயப்படுத்தி சட்டையைக் கழற்ற வைத்தனர். பின்னர், அவனை வெளியில் அழைத்து வந்து சட்டையின்றிச் சந்தையில் ஊர்வலமாக இழுத்துச் சென்றனர்.

சுமார் 30 நிமிடங்கள் இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்றும் போலீஸ் தலையீடு எதுவும் நடக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாகக் கேள்வி கேட்கச் சென்ற சிறுவனின் சகோதரரையும் மூன்று பேரும் சேர்ந்து அடித்துள்ளனர்.

``சந்தையில் சில சலசலப்புகள் நிலவி வந்தன. யாரோ ஒருவரை ஊர்வலமாக இழுத்துச் சென்றதாகவும் கேள்விப்பட்டேன். சில மணி நேரங்களுக்குப் பிறகே அவன் என்னுடைய மகன் என்பது தெரிய வந்தது” என்று அச்சிறுவனின் தாய் இச்சம்பவம் தொடர்பாகப் பேசத் தொடங்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், ``ஒரு சிறுவனை எப்படி இவர்கள் அடிக்கலாம். பெற்றோர்களிடம் சொல்லியிருக்க வேண்டும். அல்லது, இந்தமாதிரியான குற்றம் செய்ததற்குக் காவல்துறையிடம் அவனை ஒப்படைத்திருக்க வேண்டும். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அவன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளான். பள்ளியில் சக மாணவர்கள் அவனைக் கேலி செய்கிறார்கள். திருடன் என்று அழைக்கிறார்கள். எந்த மாணவர்களும் அவனுடன் பேசுவதில்லை. துயரமான இந்த நிலைக்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வது?” என்று கூறியுள்ளார்.

மும்ப்ரா காவல்துறையினர், இந்தச் சம்பவத்தை ஐ.பி.சி 323, 504 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ATTACK