'வீட்ல போய் ஆடுங்க.. போங்க'.. குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் 'டிக்டாக்' டான்ஸ் ஆடிய நர்ஸ்களுக்கு கட்டாய விடுப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Jun 27, 2019 08:06 PM
நகரங்களில் தொடங்கி பட்டி தொட்டி எங்கும் பரவி பரபரப்பை அவ்வப்போது கிளப்பிக் கொண்டு வருகிறது டிக்டாக் வீடியோக்கள்.
இளசுகளும் பெருசுகளும் என வயது வித்தியாசம் பார்க்காமல் டிக்டாக்குக்கு அடிமையாகி பலரும் பலவிதமான வீடியோக்களை பகிர்கின்றனர். ஆட்டம் ஆடியும், பாட்டு பாடியும், திரைப்படங்களில் வரும் வசனங்களை பேசியும், இடம்-பொருள்-ஏவல் என எதுவும் பார்க்காமல் பகிரப்படும் பல வீடியோக்கள் தினந்தோறும் இணையத்தில் அதிரிபுதிரியாக இடம்பிடித்து ஹிட் அடித்து விடுகின்றன.
‘அட இது நல்லா இருக்கே.. நம்மளும் போட்டா இப்படி லைக்ஸ் வாங்கலாமே’ என்ற நினைப்பில் மேலும் பலரும் இதே வழியைப் பின்பற்றி டிக்டாக்கில் மூழ்க தொடங்குகின்றனர். வெகு சிலரே இதுபோன்ற செயல்களை வெறும் பொழுதுபோக்கு அம்சங்களாக பயன்படுத்திவிட்டு அந்த உணர்விலிருந்து வெளியே வந்து இயல்பான வாழ்க்கையை வாழ்கின்றனர்.
அவ்வகையில் ஒடிசா மாநிலத்தின் தலைமை மருத்துவமனையில் இருந்த பெண் செவிலியர்கள், ‘பிறந்த குழந்தைகளைக் கண்காணிக்கும் சிறப்பு சிகிச்சை பிரிவுக்குள் இருந்தபடி ஆடி பாடி டிக்டாக் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையதளங்களில் பரவி, அது மாவட்ட முதன்மை மருத்துவ அலுவலர் வரைக்கும் சென்று விட்டது.
மருத்துவமனையில், பணி நேரத்தில், அதுவும் இப்படி ஒரு பிரிவில் இருந்து கொண்டு பெண் செவிலியர்கள் பொறுப்பில்லாமல் டான்ஸ் ஆடி, பாட்டு பாடி டிக் டாக் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தது வன்மையாக கண்டிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு ஷோகேஸ் நோட்டீசும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டு மருத்துவமனை ரூபி ரே, டபாஸி பிஸ்வாஸ், ஸ்வப்னா பாலா, நந்தினி ராய் உள்ளிட்ட 4 பேரையும் வீட்டுக்கு அனுப்பியுள்ளது.