அதிர்ச்சி! ஒரு மாதத்தில் திருமணம்.. சேகர் ரெட்டி மகளுக்கு நிச்சயமான மாப்பிள்ளை மாரடைப்பால் மரணம்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகி அதிகாரி தர்மா ரெட்டி. இவரது மகன் சந்திரமவுலி ரெட்டி (வயது 28). இவருக்கும், திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு - புதுச்சேரி மாநில ஆலோசனைக்கு குழு தலைவரும், தொழில் அதிபருமான சேகர் ரெட்டியின் மகளுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
இதனைத் தொடர்ந்து, சந்திரமவுலி ரெட்டி மற்றும் சேகர் ரெட்டி மகள் ஆகியோரின் திருமணமும், 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி சென்னையில் வைத்து நடைபெற இருந்தது. மேலும், இதில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் கலந்து கொள்ள இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில், திருமண வேலைகளில் ஈடுபட்டு வந்த சந்திரமவுலி ரெட்டிக்கு கடந்த சில தினங்கள் முன்பாக திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் வந்தது.
இது தொடர்பாக, சமீபத்தில் காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது. அதில், மாரடைப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சந்திரமவுலி ரெட்டிக்கு சிபிஆர் பரிசோதனை முடிந்ததையடுத்து எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டிருந்ததாகவும், ஸ்டண்ட் கருவி பொருத்தப்பட்டிருந்தகாகவும் தெரிவிக்கப்பட்டது.
மறுபக்கம், சந்திரமவுலியின் உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதால் கவலைக்கிடமாக இருக்கும் சந்திரமவுலி ரெட்டியை தீவிரமாக மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்படிருந்தது.
இந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த சந்திரமவுலி, தற்போது பலனளிக்காமல் உயிரிழந்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இன்று (21.12.2022) காலை சுமார் 8:20 மணியளவில் சந்திரமவுலி உயிரிழந்தார் என காவேரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சந்திரமவுலி தனது கண்களை தானமாக வழங்க ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்ததால், அவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.
28 வயதே ஆகும் சந்திரமவுலி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தினரை கடும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது. அடுத்த மாதத்தில் திருமணம் நடைபெற இருந்த சூழலில், மாப்பிள்ளை இறந்து போனது அனைவரையும் மீளாத் துயரில் ஆழ்த்தி உள்ளது.