மாலை மாற்றிய உடனேயே மயங்கி விழுந்து மணப்பெண் மரணம்.. பெரும் சோகத்தில் மூழ்கிய திருமண வீடு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேச மாநிலத்தில் திருமண சடங்கின் போது 20 வயதான மணப்பெண் மண மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீப காலங்களில் இளம் வயதினர் பலர் திடீரென ஏற்படும் மாரடைப்பால் உயிரிழந்த செய்திகளை நாம் அதிகமாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் உத்திர பிரதேசம் மாநிலம் லக்னோவில் 20 வயதான மணப்பெண் ஒருவர் மணமேடையிலேயே மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
உத்திர பிரதேச மாநிலம் லக்னோ அருகே உள்ள மலிஹாபத் பகுதியை அடுத்த பாத்வனா கிராமத்தில் கடந்த இரண்டாம் தேதி திருமண வைபவம் ஒன்று நடந்திருக்கிறது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ராஜ்பால் என்பவரின் மகள் சிவாங்கி என்ற இளம் பெண்ணிற்கும் விவேக் என்ற இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த இரண்டாம் தேதி வர மாலை சடங்கு நடைபெற்றிருக்கிறது.
அப்போது சிவாங்கி - விவேக் ஆகிய இருவரும் மாலையை மாற்றி இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து நிகழ்வுக்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தம்பதி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது திடீரென மேடையிலேயே சிவாங்கி மயக்கம் அடைந்து கீழே விழுந்திருக்கிறார். இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
உடனடியாக சிவாங்கியை அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு அவர்கள் அழைத்துச் சென்று இருக்கின்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே மரணம் அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். மாரடைப்பால் சிவாங்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த சிவாங்கி கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறார். அவருக்கு காய்ச்சல் மற்றும் இரத்த அழுத்தமும் குறைவாக இருந்ததாக தெரிகிறது.
இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்து வேளையில் தான் திருமணம் நடைபெற்று இருக்கிறது. திருமணத்தின் போது சிவாங்கி மரணம் அடையவே அவரது உறவினர்கள் இறுதிச் சடங்கினை மேற்கொண்டு இருக்கின்றனர். இது குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் இதனை அறிந்த காவல்துறையினர் இது குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 20 வயதான மணப்பெண் மாரடைப்பால் மனமேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
