லெஹெங்காவால் வந்த சிக்கல்.? பொசுக்குன்னு கல்யாணத்தை நிறுத்திய மணப்பெண்.. உறைந்துபோன உறவினர்கள்.!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திரகாண்ட் மாநிலத்தில் மணமகன் வீடு அளித்த லெஹெங்கா ஆடை மிகவும் மலிவானதாக இருப்பதாக கூறி மணப்பெண் திருமணத்தையே நிறுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது பலரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
திருமணங்களை பொறுத்தவரையில் பல்வேறு விதங்களில் சிக்கல்கள் எழும். உடை தேர்வுகள் துவங்கி, கல்யாண விருந்து என எங்கே எப்போது எப்படி பிரச்சனை வரும் என்பதை யாரும் கணிக்க முடியாது. இப்படி பல்வேறு காரணங்களினால் திருமணம் நிறுத்தப்பட்டிருப்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் உத்திரகாண்ட் மாநிலத்தில் நடந்ததாக சொல்லப்படும் இந்த நிகழ்வு அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழத்தியுள்ளது.
உத்திரகாண்ட் மாநிலம் அல்மோரா பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், நைனிடால் அருகே உள்ள ஹால்த்வானி ஹோத்வாலி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தெரிகிறது. அப்போது, இருவருக்கும் இடையே இந்த மாதம் (நவம்பர்) திருமணம் நடத்த இரு வீட்டாரும் முடிவெடுத்திருக்கின்றனர். தொடர்ந்து கல்யாண வேலைகள் தடபுடலாக நடைபெற்று வந்திருக்கின்றன. இந்நிலையில், வழக்கப்படி மணப்பெண்ணுக்கான லெஹெங்கா ஆடையை மணமகன் வீட்டார் வாங்கியிருக்கின்றனர்.
லக்னோவில் இருந்து 10 ஆயிரம் ரூபாய்க்கு அந்த லெஹெங்கா மணமகன் வீட்டினரால் வாங்கப்பட்டதாக தெரிகிறது. அது மணமகள் வீட்டுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த லெஹெங்கா மலிவான விலையில் வாங்கப்பட்டிருப்பதாக மணப்பெண் கூற, இருவீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றதாக தெரிகிறது. இது பெரிதாகவே இருவீட்டாரும் பெரியவர்கள் முன்னிலையில் தங்களது வாதங்களை முன்வந்திருக்கின்றனர். இருப்பினும் சிக்கல் தீர்ந்தபாடில்லை. கடைசியில், இந்த திருமணத்தை கைவிடுவது என இருவீட்டாரும் முடிவெடுத்ததாக சொல்லப்படுகிறது.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்களும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடத்தில் கொடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. இந்நிலையில், லெஹெங்காவில் வந்த சிக்கலால் திருமணமே நின்று போனது அப்பகுதி மக்களையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.