"ஒரு முட்டாளை சீக்கிரமா கண்டுபிடிச்சிட்டு".. ட்விட்டர் CEO பொறுப்பில் இருந்து விலகும் எலான் மஸ்க்?.. பரபர ட்வீட்!!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தான் ட்விட்டர் தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என கருத்துக் கணிப்பில் அதிகம் பேர் வாக்களித்துள்ள நிலையில் இதற்கான முடிவை அவர் தற்போது அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வசித்து வரும் எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். முன்னதாக 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மஸ்க் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், போலி கணக்குகள் பற்றி தகவல்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிடவில்லை எனக் கூறி நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார் மஸ்க்.
இதைத் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாக ட்விட்டர் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த சூழலில் ட்விட்டரை கைப்பற்றி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் மஸ்க். இதனிடையே, வாசனை திரவிய தொழிலும் அவர் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
அப்படி ஒரு சூழலில், ட்விட்டரை எலான் மாஸ்க் வாங்கிய பின்னர், அவரையும் ட்விட்டரையும் சுற்றி பல்வேறு பரபரப்பு சம்பவங்களும் அரங்கேறி வந்தது. ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை பதவிகளில் இருந்த நபர்களை வேலையை விட்டு நீக்கியது, ட்விட்டர் அலுவலகத்தில் பெட்ரூம் வைத்தது, ஏராளமான ஊழியர்களை பணி நீக்கம் செய்தது என எலான் மஸ்க் மேற்கொண்ட பல நடவடிக்கைகள், உலக அளவில் பேசு பொருளாக மாறி இருந்தது.
இந்த நிலையில் தான், ட்விட்டர் தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டுமா? இல்லையா? என்ற புதிய கருத்துக் கணிப்பு ஒன்றை எலான் மஸ்க் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். மேலும் இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளுக்கு நான் கட்டுப்படுவேன் என்றும் தனது ட்வீட்டில் எலான் மஸ்க் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளில், எலான் மஸ்க் தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்று 57.5 சதவீதம் பேரும், விலக வேண்டாம் என 42.5 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். இந்த முடிவுகளுக்கு கட்டுப்படுவேன் என எலான் மாஸ்க் தெரிவித்துள்ள சூழலில், இது தொடர்பாக தனது முடிவை எலான் மஸ்க் அறிவிக்காமல் இருந்து வந்தார். அதே வேளையில், இந்த கருத்துக்கணிப்பு குறித்து ட்விட்டர் வாசிகள் குறிப்பிடும் பதிவுகளில் கமெண்ட் செய்து வந்த எலான் மஸ்க், தற்போது இதற்கான பதிலை அளித்து வந்தார்.
இந்த நிலையில், தற்போது கருத்து கணிப்பு முடிவுகள் கீழ் கமெண்ட் செய்துள்ள எலான் மஸ்க், "பதவிக்கேற்ற ஒரு முட்டாளை விரைவில் கண்டறிந்த பின், ட்விட்டர் CEO பொறுப்பில் இருந்து நான் ராஜினாமா செய்கிறேன். அதன் பின்னர், சாஃப்ட்வேர் மற்றும் சர்வர் குழுக்களுக்கு மட்டும் தலைமை வகிப்பேன்" என குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியது முதல் பல்வேறு பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறி வந்தது. அப்படி ஒரு சூழலில் தலைமை பொறுப்பில் இருந்து விலகி வேறொருவரை நியமிக்க போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளது அதிக வைரலாகி வருகிறது.
Also Read | அர்ஜென்டினா கப் ஜெயிச்ச இரவில்.. ஸ்தம்பிச்சு போன இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்.. வரலாறு படைத்த மெஸ்ஸியின் பதிவு!!