'ரபேல் மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி'.. 'ராகுல் எதிர்காலத்தில் இப்படி பேசக்கூடாது.. அவரது மன்னிப்பை'.. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Nov 14, 2019 11:55 AM
இந்திய விமானப்படையை பலப்படுத்தும் நோக்கில் 36 ரபேல் போர் விமானங்களை பிரான்ஸிடம் இருந்து 58 ஆயிரம் கோடி ரூபாயில் வாங்குவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2016-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி ஒப்பந்தம் போட்டது. இந்த ஒப்பந்தம் போடப்பட்டது முதல் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது வரை ஊழல் நடந்ததாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, கோர்ட்டு மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் 6 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்திருந்ததை அடுத்து 6 மாதங்களுக்கு பின்னர் அந்த மறு சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
முன்னதாக ரபேல் வழக்கில் ஊடகங்களில் கசிந்த ஆவணங்களின் அடிப்படையில் மறு சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்புகள் வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்டு தீர்ப்பளித்தபோது, காவலாளியே திருடன் என சுப்ரீம் கோர்ட்டு ஒப்புக்கொண்டு விட்டது ராகுல் காந்தி தெரிவித்த கருத்து சர்ச்சைக்குரியதாக மாறியது.
இதனையடுத்து பாரதீய ஜனதா பெண் எம்.பி. மீனாட்சி லேகி ராகுல் மீது வழக்கு தொடுத்தார். இதற்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், இனி வரும் காலங்களில் ராகுல்காந்தி கவனமாக பேச வேண்டும் என்றும் ராகுல்காந்தியின் மன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும் கூறிய உச்சநீதிமன்றம் ரபேல் விவகாரத்தில் பிரதமரை அவதூறாக பேசியதாக பாஜக எம்.பி மீனாட்சி லேகி தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.