'இம்முறையாவது எதிர்கட்சித் தலைவர் ஆவாரா ராகுல் காந்தி?'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | May 23, 2019 04:06 PM
தேசியக் கட்சியான காங்கிரஸ் இந்த முறையாவது எதிர்க் கட்சி அந்தஸ்தை பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மக்களவையில் மொத்தம் 545 இடங்கள் உள்ளன. இதில் 2 பேர் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுவர். எஞ்சிய 543 பேர், தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவர். இதில் மத்தியில், ஆட்சியமைக்க 272 இடங்களில் வெற்றிபெற வேண்டியது அவசியமாகும். இதனிடையே, தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்துசெய்தது.
இதை தவிர்த்து 542 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி துவங்கி இம்மாதம் 19 -ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் உள்பட மொத்தம் 8,049 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 724 பேர் பெண்கள். இந்தத் தேர்தலில் சுமார் 90 கோடி வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
542 தொகுதிகளில், 273 இடங்களில் பா.ஜ.க.வும், காங்கிரசும் நேருக்கு நேர் போட்டியிட்டன. பா.ஜ.க. கூட்டணி 437 வேட்பாளர்களையும், காங்கிரஸ் கூட்டணி 421 வேட்பாளர்களையும் களமிறக்கியது. முதன்முறையாக காங்கிரஸ் கட்சியைக் காட்டிலும், அதிகமான வேட்பாளர்களை பா.ஜ.க. நிறுத்தியது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்து, கடந்த 2014-ம் ஆண்டை விட கூடுதலாக, 11 இடங்களில் அதாவது 293 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் 2-வது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் அரியணை ஏற உள்ளது.
பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து பெற வேண்டும் என்றால் 55 தொகுதிகளில் ஒரு கட்சி வெற்றி பெற்றிருக்க வேண்டும். தேசிய கட்சியான காங்கிரசை பொறுத்தவரை 55 இடங்களில் முன்னிலை வகிப்பதால், இம்முறை எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும் என்றே பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இம்முறை எதிர்கட்சி தலைவராக செயல்படுவார் என தொண்டர்கள் காத்துள்ளனர்.
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் 44 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றதால், பிரதான எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்கவில்லை. எது எப்படி இருந்தாலும் எண்ணிக்கை முடிவுகள் முழுமையாக முடிந்த பின்னர்தான் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைப்பது உறுதிபட தெரியவரும்.