'ப்ளீஸ் உடனே இத பண்ணுங்க'.. காங்கிரஸ் 'தலைவர்' பொறுப்பை ராஜினாமா செய்த ராகுல் ட்விட்டரில் செய்த காரியம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Jul 03, 2019 07:43 PM
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதோடு, தனது ட்விட்டர் பக்கத்திலும் தனது பொறுப்பை மாற்றி அப்டேட் செய்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. குறிப்பாக அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியை எதிர்த்துப் போட்டியிட்ட ராகுல் காந்தி, தோல்வியைத் தழுவினார். இந்தத் தேர்தல் முடிவுகளுக்கு பின், ராகுல் தனது பதவி விலகல் முடிவை அறிவித்திருந்தார். ஆனாலும் மூத்த தலைவர்களும் தொண்டர்களும் ராகுலை சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனால் அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இதனை அடுத்து, தனது இந்த பதவி விலகல் முடிவை தீர்க்கமாக ராகுல் அறிவித்ததோடு, அதுகுறித்த விரிவான அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், நடந்து முடிந்த 17-வது நாடாளுமன்றத் தேர்தலில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு, தான் பொறுப்பேற்று, தனது கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்க கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தவிர, தான் முன்னதாகவே ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டதால், தொடர்ந்து தன்னால் நீண்டநாள் தலைவராக தொடர முடியாது என்பதால், தாமதிக்காமல் காங்கிரஸ் கட்சிக்கு உடனே புதிய தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சுதந்திர இந்தியாவை முன்னெடுத்தவர்களில் முக்கியமானவரான நேருவின் மீதான புகழ்வெளிச்சம் காங்கிரஸ் மீதான இத்தனை ஆண்டுகால அபிப்ராயத்தை மக்கள் மத்தியில் தக்கவைத்துக்கொள்ள உதவியது என்றால், அதே சமயம் தொடர்ந்து குடும்பத் தலைமை நீடித்து வந்ததும் காங்கிரஸின் பின்னடைவுக்குக் காரணமாக அமைந்தது என்று அரசியல் விமர்சகர்கள் வட்டாரம் தெரிவிக்கும் இந்நேரம், ராகுலின் இந்த பதவி விலகல் வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.