'ரேபிட் டெஸ்ட்' பரிசோதனையை நிறுத்திய ராஜஸ்தான்...! 'இதனால தான் ஸ்டாப் பண்ணிருக்கோம்...' சுகாதார அமைச்சர் அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Apr 21, 2020 03:34 PM

ராஜஸ்தானில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கும் ரேபிட் டெஸ்ட் கருவிகள் தவறான முடிவை காட்டியதால் சோதனை செய்யும் பணியை நிறுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் ரகு சர்மா தெரிவித்த செய்தி அம்மாநிலமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Rajasthan announces suspension of Rapid test for detecting corona

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் ராஜஸ்தான் நான்காவது இடத்தில் உள்ளது. இதுவரை சுமார் 1,628 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் 205 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர் மற்றும் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் விரைவாக சோதனை செய்யும் வகையில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பாதிப்புகளின் அடிப்படையில் எல்லா மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் பரிசோதனைக்கு உபயோகிக்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவிகள் தவறான முடிவை காட்டியதால் கொரோனா பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ரகு சர்மா, ஏற்கனவே கோவிட் -19 உறுதிப்படுத்தப்பட்ட 168 நோயாளிகளுக்கு ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் சோதனை நடத்தப்பட்டது. இதில் 5.4 சதவீதம் பேருக்கு மட்டும் தான் கொரோனா தொற்று உள்ளதாக தவறான முடிவுகள் காட்டியது. இதனால் தற்போது ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் பரிசோதிப்பதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம் எனவும் இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) பரிந்துரைகளுக்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் எஸ்.எம்.எஸ் மருத்துவக் கல்லூரியின் மருத்துவம் மற்றும் நுண்ணுயிரியல் துறையின் மருத்துவர்கள் கோவிட் 19 நோயாளிகளுக்கு ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் நோயின் தீவிரத்தை அறிய முயற்சி செய்துள்ளனர். அதில் வெளிவந்த முடிவுகளில் அதிருப்தி அடைந்த அவர்கள், சோதனைகளை நிறுத்துமாறு எங்களுக்கு அறிவுறுத்தினர் என செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் சர்மா.

Tags : #RAJASTHAN