'புதிதாக பாதிப்புகள் எதுவும் இல்லை' ... 'இந்தியா'வுக்கே முன்னோடியாக விளங்கும் "அதிசய" மாவட்டம்! ... 'கொரோனா'வை கட்டுப்படுத்தியது எப்படி?
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் மாதம் 14 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. இதுவரை சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பில்வாரா மாவட்டத்தில் கடந்த இரண்டாம் தேதி முதல் இதுவரை புதிதாக கொரோனா வைரஸ் மூலம் யாரும் பாதிக்கப்படவில்லை. நாட்டின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் அச்சுறுத்தியுள்ள நிலையில் பில்வாரா மாவட்டம் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
பில்வாரா மாவட்டத்தில் மார்ச் மாதம் 19 அன்று கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட முதல் நபர் கண்டறியப்பட்டார். அதன்பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அந்த மாவட்டத்தில் உயர தொடங்கியது. மேலும் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்தனர். அப்போது ராஜஸ்தான் மாநிலத்தின் ஹாட்ஸ்பாட் மாவட்டமாக பில்வாரா அறிவிக்கப்பட்டது.
உடனடியாக பில்வாரா மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தது. கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டவர்கள் இருந்த பகுதி முற்றிலுமாக சீல் வைக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளே செல்லவும், வெளியே போகவும் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. ஏப்ரல் இரண்டாம் தேதி வரை கடுமையாக ஊரடங்கை அமல்படுத்தினார் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர பட்.
மார்ச் 20 ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் இணைந்து வீடு வீடாக சென்று பாதிக்கபட்டர்வகள் கணக்கை எடுக்க ஆரம்பித்தனர். மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தவிர வேறு யாரும் பொதுவெளிகளில் செல்ல முடியாத நிலைக்கு கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. சுகாதாரத்துறை அதிகாரிகளின் கணக்கெடுப்பில் சுமார் 11,000 வரை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் மக்கள் வீட்டை விட்டு வெளிய வராத நிலை இருந்ததால் வீட்டிற்கே அனைத்து பொருட்கள் போய் சேர மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.
மேலும் மாவட்டத்தின் ஆபத்தான பகுதிகள் முழுவதுமாக மூடப்பட்டது. பாசிட்டிவ் என அறியப்பட்ட 27 பேருக்கு சிகிச்சையளித்ததில் 13 பேர் முற்றிலுமாக குணமடைந்து விட்டனர். 12 பேர் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கையால் கடந்த சில நாட்களில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை.
இதுகுறித்து பில்வாரா மாவட்ட கலெக்டர் ராஜேந்திர பட் கூறுகையில், 'துணை ஆட்சியர்கள் முதல் அத்தனை அரசு ஊழியர்களையும் களத்தில் இறக்கி போராட ஆரம்பித்தோம். எந்தவித சமரசமும் இல்லாமல் கடுமையாக உழைத்தோம். அதன் பயனாக இப்போது மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது' என தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் அதிகம் பாதித்த பகுதியாக இருந்த பில்வாரா மாவட்டம் பின் மேற்கொண்ட ஒழுங்கான ஊரடங்கு மூலம் வைரஸை முழுமையாக கட்டுப்படுத்தியது ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.