'பிடிவாதம் பிடிக்கும் ராகுல் காந்தி?'... அடுத்தது என்ன??
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | May 28, 2019 12:36 PM
காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருப்பதால், இந்த வாரத்தில் மீண்டும் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 52 இடங்களில் மட்டுமே வென்று இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை தவறவிட்டது காங்கிரஸ் கட்சி. அதிலும் 39 ஆண்டுகளாக அமேதி தொகுதியில் நேரு குடும்பத்தினர் வெற்றிபெற்ற நிலையில், இந்த தேர்தலில் ஸ்மிருதி இரானியிடம் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் தோல்வியடைந்துள்ளார்.
இந்தத் தோல்விக் குறித்து ஆய்வு செய்ய, கடந்த 25-ந் தேதி காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில், அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், ராகுலின் ராஜினாமாவை நிராகரித்த உறுப்பினர்கள், கட்சியில் மாற்றங்கள் கொண்டுவர ராகுலுக்கு முழு சுதந்திரம் வழங்குவதாக தீர்மானம் நிறைவேற்றினர்.
இதனிடையே, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று 6 மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இந்த சூழலில் ராகுல், தனது ராஜினாமா முடிவில் இருந்து பின்வாங்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், தனது இடத்தை நிரப்பக் கூடிய தலைவர் யார் எனக் கூறுமாறு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், பொருளாளர் அகமது படேலிடம், ராகுல் காந்தி கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் சமாதானத்தை ஏற்க மறுத்த ராகுல் காந்தி, தனது முடிவில் உறுதியாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
சவாலான இந்த நேரத்தில் கட்சியை நடத்துவதற்கு தகுதியுள்ள, தனது குடும்பத்தை சேராத, அதேசமயம் போதிய அனுபவமும், தலைமைக்குரிய தகுதியும் கொண்ட ஒரு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்படியும் அவர்களிடம் ராகுல் காந்தி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் மூத்த நிர்வாகிகள் தங்கள் மகன்களுக்கு ‘சீட்’ கேட்டு தன்னை தொந்தரவு செய்ததாகவும் ராகுல் காந்தி கூறியதாக தெரிகிறது. ஆனால் இதனை மறுத்துள்ள அவர்கள், அன்றாட கட்சிப் பணிகள் குறித்து பேசவே ராகுலை சந்தித்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்ததாக கூறப்படுவது உள்பட, காரிய கமிட்டி கூட்டத்தில் நடைபெற்றதாக கூறப்படும் அனைத்து தகவல்களையும் அவர் மறுத்தார். இந்நிலையில், ராகுல் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாவிட்டால், மீண்டும் இந்த வாரத்தில் காரிய கமிட்டி கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.