விரைவில் தமிழக முதல்வராக வர வேண்டும்.. மு.க.ஸ்டாலினை வாழ்த்திய ஜெகன்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | May 30, 2019 03:50 PM
ஆந்திர மாநில முதல்வராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனுமான ஜெகன்மோகன் ரெட்டி வியாழக்கிழமையன்று பதவியேற்றார்.
ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை வீழ்த்தி தனிப்பெரும்பான்மை பெற்றது. இதைத்தொடர்ந்து கட்சி எம்.எல்.ஏ.க்களால் சட்டமன்றக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார் ஜெகன் மோகன் ரெட்டி. அவரை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார் ஆந்திர ஆளுநர் நரசிம்மன்.
இதைத்தொடர்ந்து விஜயவாடாவில் வியாழக்கிழமையன்று நடைபெற்ற பிரமாண்ட விழாவில் ஆந்திர மாநில முதல்வராக முதல் முறையாக பதவியேற்றார் ஜெகன். ஆளுநர் நரசிம்மன் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ஜெகனின் பதவியேற்பு விழாவில் அவரது தாயார் விஜயம்மா கலந்து கொண்டார். இன்று ஜெகன் மோகன் ரெட்டி மட்டுமே பதவியேற்றார். அவரது அமைச்சரவை வரும் ஜூன் 6-ம் தேதி பதவியேற்கிறது.
ஜெகனின் பதவியேற்பு விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து பிரதான எதிர்க்கட்சியான திமுக தலைவர் ஸ்டாலின் ஜெகனின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றதும் ஆளுநர் நரசிம்மன் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின், ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாழ்த்து தெரிவித்து பேசினார்.
அப்போது தனது பேச்சை தொடங்குவதற்கு முன்பு, அந்தர்கி வணக்கம் என தெலுங்கில் கூறி தனது உரையை தொடங்கினார் ஸ்டாலின். முதலில் தெலுங்கிலும், பின்னர் தமிழிலும் வணக்கம் கூறிய ஸ்டாலின் பின்னர் ஆங்கிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாழ்த்து தெரிவித்து நன்றி கூறினார். ஸ்டாலின் தெலுங்கில் பேசுவதை ரசித்து கேட்ட ஜெகன் மோகன் ரெட்டியும், சந்திரசேகர் ராவும் மேடையில் இருந்தபடியே புன்முறுவல் பூத்தனர். மேலும் கடவுள் ஆசிர்வாதத்தில், தமிழக முதல்வராக ஸ்டாலின் விரைவில் பொறுப்பேற்க வேண்டும் என்று ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.