தப்பியோடி... கொலைக்குப்பின் 10 கி.மீ 'நடந்து' சென்ற குற்றவாளிகள்... 'சிசிடிவி' காட்சிகளை கைப்பற்றிய போலீசார்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Jan 12, 2020 08:39 PM
கடந்த 8-ம் தேதி இரவு கன்னியாகுமரி களியக்காவிளை செக் போஸ்டில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் இரண்டு பேரால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். சுட்டது மட்டுமின்றி அவரது உடலை இழுத்து கத்தியாலும் வெட்டினர். பொதுமக்கள் சத்தம் கேட்டு வரவில்லை என்றால், அவரது உடலை முழுவதுமாக சிதைத்து இருப்பர் என்று கூறப்படுகிறது.
போலீஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ள இந்த கொலை சம்பவம் தொடர்பாக 10-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தமிழக போலீசாருடன், கேரள போலீசாரும் இணைந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த நிலையில் கேரள மாநிலம் கொல்லம் தென்மலை பகுதியில் நான்குபேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அதில் எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வில்சனை கொலை செய்த பிறகு கொலையாளிகள் அந்த பகுதியில் இருந்து தப்பித்து ஓடியுள்ளனர். பின்னர் இருவரும் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் கேரள மாநிலத்துக்குள் நடந்து சென்றுள்ளனர். கொலையாளிகள் இருவரும் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி இருக்கின்றனர். இதுதவிர வில்சனை கொலை செய்வதற்கு முன்பு அவர்கள் ஆயுத பயிற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. தற்போது கேரள எல்லையில் கைது செய்யப்பட்ட நால்வரையும் தமிழக போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.