ஆக்ரோஷமாக சரிந்த பனி.. சுரங்கத்தில் சிக்கிய 172 தொழிலாளர்கள்.. திக்.. திக்.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாஷ்மீரில் பனிச் சரிவில் சிக்கிய 172 தொழிலாளர்களை ராணுவ வீரர்கள் கொண்ட குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்த வருடம் கடுமையான பனிப் பொழிவு இருந்து வருகிறது. வழக்கமாக குளிர் காலங்களில் இருப்பதை விட குறைவான அளவிலேயே வெப்பநிலை பதிவாகி வருகிறது. மேலும், பனிப் பொழிவு காரணமாக போக்குவரத்து காஷ்மீர் முழுவதும் ஸ்தம்பித்துள்ளது. அதேபோல, கடந்த வாரத்தில் இரண்டு முறை அங்கே பனி சரிவு ஏற்பட்டிருக்கிறது.
காஷ்மீரில் உள்ள கான்செர்பால் மாவட்டம் சர்பால் கிராமத்தில் ஜோஜிவா சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கே தனியார் நிறுவனத்தை சேர்ந்த 172 ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் சுரங்கம் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் திடீரென பனி சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் வெண் படலம் போல காட்சியளித்திருக்கிறது.
பனி சரிவால் சுரங்கத்தினுள் தொழிலாளர்கள் சிக்கிய நிலையில் உடனடியாக இதுகுறித்து இந்திய ராணுவத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பலனாக சம்பவ இடத்துக்கு விரைந்த வீரர்கள், சுரங்கப் பாதையில் சிக்கிய தொழிலாளர்களை பத்திரமாக மீட்டனர். இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள 12 மாவட்டங்களுக்கு நேற்று பனிச் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மேலும், அனந்த்நாக், பந்திபோரா, பராமுல்லா, தோடா, கந்தர்பால், கிஸ்ட்வர், குல்கம், பூஞ்ச், ரஜவுரி, ரம்பன் மற்றும் ரீசி உள்ளிட்ட மாவட்டங்களில் பனிச்சரிவு ஏற்படலாம் எனவும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வலியுறுத்தி இருந்தது.
இதனிடையே, பனிச்சரிவு ஏற்பட்டதால் சுனாமி அலைகள் போல பனி பல மீட்டர் உயரத்துக்கு பரவிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மத்திய காஷ்மீரில் கந்தர்பால் மாவட்டத்தில் அமைந்துள்ள சோனாமார்க்கில் உள்ள பால்டால் பகுதிக்கு அருகே கடந்த வியாழக்கிழமை பனிச்சரிவு ஏற்பட்டதாகவும் அதில் இருவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Frightening visuals of the avalanche that hit Sonmarg in Kashmir! Praying for the safety of people affected.#Avalanche #JammuAndKashmir #Kashmir pic.twitter.com/UYjEpByJ2w
— CAN YAMAN INDIA'FAN'S ARMY'S CLUB'S GROUP'S 🇮🇳🇮 (@canindiafansclb) January 12, 2023