"வாழ்க்கைல முதல் தடவை கரண்ட் பல்ப்பை பாக்குறோம்".. 75 வருஷ காத்திருப்பு.. நெகிழ்ந்துபோன கிராம மக்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாஷ்மீரில் உள்ள கிராமம் ஒன்றில் முதன் முறையாக மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள தூரு பிளாக்கில் உள்ளது டெத்தன் எனும் சிறிய கிராமம். இங்கு மின்சார வசதிகளே கிடையாது. இங்குள்ள வயதானவர்கள் பலரும் மின்சார சாதனங்களை பயன்படுத்தியது கூட இல்லை. இந்நிலையில் இதுகுறித்து தொடர்ந்து அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த கிராம மக்களின் பல்லாண்டு கோரிக்கை நிறைவடைந்திருக்கிறது. மத்திய அரசின் நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்த கிராமத்திற்கு மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
வெறும் 200 பேர் மட்டுமே வசிக்கும் இந்த தொலைதூர கிராமத்தில் மத்திய அரசு வழங்கும் பிரதமர் மேம்பாட்டுத் தொகுப்பு திட்டத்தின் கீழ் தற்போது மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஃபசுல்-உ-தின் கான் பேசுகையில், "இன்று முதல் முறையாக மின்சாரத்தைப் பார்த்தோம். எங்கள் குழந்தைகள் இப்போது வெளிச்சத்தில் படிப்பார்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மின்சாரம் இல்லாததால் நாங்கள் நிறைய சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. இதுவரை எங்களின் எரிசக்தி தேவைகளுக்கு பாரம்பரிய மரத்தையே நம்பியிருந்தோம். தற்போது எங்களது பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன. மின்சாரம் வழங்கியதற்காக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறைக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.
மின்சாரத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அயராத முயற்சியால், அனந்த்நாக் நகரத்திலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தக் கிராமத்துக்கு மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அனந்த்நாக் மின் மேம்பாட்டுத் துறையின் தொழில்நுட்ப அதிகாரி ஃபயாஸ் அஹ்மத் சோஃபி இதுகுறித்து பேசுகையில்,"நாங்கள் 2022 இல் நெட்வொர்க்கிங் செயல்முறையைத் தொடங்கினோம். ஆனால் உயர் அழுத்தக் கம்பிகளை நிறுவுவதில் சிக்கல் இருந்தது.
இன்று இந்த தொலைதூர பகுதிக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இங்கு 63 (KV) மின்மாற்றி உள்ளது. இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் 75 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மின்சாரத்தைப் பார்த்துள்ளனர். இந்த கிராமத்தில் 60 வீடுகளுக்கு தற்போது மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.