"ஒவ்வொரு நிமிஷமும் செத்துப் பிழைக்கிறோம்.. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க".. அமெரிக்காவில் மரணமடைந்த மகள்.. இந்தியாவில் மன்றாடும் பெற்றோர்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகணவர் துன்புறுத்துவதாக கூறி, அமெரிக்காவில் வசித்துவந்த இந்திய பெண் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் அவரது உடலை இந்தியா கொண்டுவர அரசிடம் உதவி கோரியுள்ளது அவரது குடும்பம்.

மன்தீப் கவுர்
உத்தர பிரதேசத்தின் பிஜ்னோர் நகரில் வசித்துவருபவர் ஜஸ்பால் சிங். இவருடைய மகள் மன்தீப் கவுர். இவருக்கும் அமெரிக்காவில் வசித்துவரும் ராஜ்னோத்பீர் சிங்குக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருக்கிறது. அதன்பிறகு தனது கணவருடன் அமெரிக்கா சென்றிருக்கிறார் மன்தீப் கவுர். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். ஆனால், ஆண் குழந்தை வேண்டும் என தன்னை தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்தி வந்ததாக வீடியோ ஒன்றில் கூறியிருந்தார் மன்தீப்.
மேலும், தனது கனவர் தன்னை தினந்தோறும் தாக்கி வருவதாக அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்த அவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டது அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
உதவி
இந்நிலையில், உயிரிழந்த தங்களது மகளின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர உதவி செய்யும்படி கண்ணீருடன் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்திருக்கிறது மந்தீப் கவுரின் குடும்பம். இதுபற்றி பேசிய மந்தீப் கவுரின் சகோதரர் சந்தீப்,"அமெரிக்காவில் உயிரிழந்த எனது சகோதரிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அவர்கள் அங்கு எப்படி இருக்கிறார்கள்? எனது சகோதரியின் உடல் எப்படி வைக்கப்பட்டுள்ளது? இதனை நினைத்து ஒவ்வொரு நிமிடமும் செத்துப் பிழைக்கிறோம். உடனடியாக உடலை இந்தியா கொண்டுவர அரசு அதிகாரிகள் உதவ வேண்டும். நாங்கள் அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்திருக்கிறோம். ஒருவேளை சகோதரியின் உடல் இந்தியாவுக்கு கொண்டுவருவதில் சிரமம் ஏற்பட்டால் நாங்கள் உடனடியாக அமெரிக்கா செல்ல உதவி செய்யும்படி அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்திருக்கிறோம்" என்றார்.
கடிதம்
ராஜ்யசபா எம்பியும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராகவ் சத்தா இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் ஷங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இருப்பினும் அரசு தரப்பில் இதுகுறித்து பதில் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர் மன்தீப் கவுரின் குடும்பத்தினர்.
தீர்வல்ல
எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.
மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.
Also Read | 27 வருஷமா பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்.. முதல் சந்திப்புல நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்.. !

மற்ற செய்திகள்
