‘இதை பத்தி அவர்கிட்ட பேசுனேன்’!.. கொரோனாவால் பாதிக்கப்பட்டு தோனியின் ‘பெற்றோர்’ மருத்துவமனையில் அனுமதி.. சிஎஸ்கே கோச் சொன்ன ‘முக்கிய’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
14-வது சீசன் ஐபிஎல் தொடர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட மைதானங்களில் கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படவில்லை.
இதுவரை நடந்த 15 லீக் போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மற்றும் மும்பை வான்கடே மைதானத்தில் மட்டுமே நடந்துள்ளன. அதேபோல் கிரிக்கெட் வீரர்களும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக பயோ பபுலில் இருந்து வருகின்றனர். ஐபிஎல் தொடரில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் தந்தை பான் சிங் மற்றும் தாய் தேவகி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பல்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாகவும், இருவரது உடலிலும் ஆக்ஸிசன் லெவல் சீராக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Parents of cricketer MS Dhoni have been admitted here at the hospital after testing positive for #COVID19. Their oxygen level is stable: Pulse Superspeciality Hospital, Ranchi, Jharkhand
— ANI (@ANI) April 21, 2021
இந்த சமயத்தில் சிஎஸ்கே கேப்டன் தோனி, பயோ பபுலில் இருந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வருவதால், பெற்றோரை சந்திக்கச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே நேற்று கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டி நடைபெற்றது. இதில் 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
போட்டி முடிந்த பின் பேசிய சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் (Stephen Fleming), தோனியின் பெற்றோர் உடல்நிலை குறித்து தகவல் தெரிவித்தார். அதில், ‘தோனியின் பெற்றோர் குறித்து வீரர்களிடம் அதிகம் பேசவில்லை. ஆனால் சிஎஸ்கே நிர்வாகம் தோனியின் குடும்ப சூழ்நிலையை கவனித்து வருகிறது. அவரது குடும்பத்துக்கு தேவையான உதவிகளை செய்துள்ளது. இதுபற்றி தோனியிடம் நான் பேசினேன். எல்லாம் கட்டுக்குள்தான் உள்ளது. அடுத்த சில நாட்கள் சூழ்நிலையை உன்னிப்பாக கவனிப்போம்’ என ஸ்டீபன் ஃப்ளெமிங் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘இது எல்லோருக்கும் கடினமான நேரம். குடும்பம் மற்றும் நண்பர்களின் பாதுகாப்பு குறித்து நாங்கள் அதிகமாக பேசி வருகிறோம். தற்போது தோனிக்கு பக்கபலமாக இருக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. அவரது பெற்றோர் விரைவாக குணமடைந்துவிடுவார்கள் என நம்புகிறோம்’ என ஸ்டீபன் ஃப்ளெமிங் கூறியுள்ளார்.