உங்க குழந்தைகள 'இந்த ஸ்கூல்ல' ஜாயின் பண்ணுங்க...! இதனால குழந்தைகளுக்கு மட்டும் இல்ல, உங்களுக்கும் ஒரு சூப்பர் ஆஃபர் இருக்கு...' - அதிரடி அறிவுப்புகளை வெளியிட்ட அரசுப் பள்ளி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஆலடிக்குமுளையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை, மொத்தம் 55 மாணாக்கர்கள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, இந்த பள்ளியில் படித்து முடித்து சென்ற பழைய மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் இணைந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
தற்போது, 2021–22 கல்வியாண்டில், மாணவர்கள் சேர்க்கை தொடங்கி நடந்து வருகிறது, அதற்காக இந்த கல்வி ஆண்டில் சேரும் மாணவர்களின் பெயரில், அஞ்சலகத்தில் ஆயிரம் ரூபாய் வைப்புதொகை வைத்தும், வெறும் மாணவர்களை மட்டும் அல்லாமல் பெற்றோர்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக குலுக்கல் முறையில் பத்தாயிரம் ரூபாய் பரிசு தொகையும் வழங்குவதாக அறிவித்தனர்.
அதன்படி சேர்க்கை துவங்கிய சில நாட்களில் 14 மாணவர்கள் பள்ளியில் தற்போது சேர்ந்துள்ளனர். இதுகுறித்து தலைமையாசிரியர் சரவணன் கூறுகையில், ”பள்ளி வளாகத்தில் மாணவர்களின் மன அமைதிக்காகவும் சுற்றுச்சூழலுக்காகவும் மரங்களும், சேதபக்தியையும், பொது அறிவையும் வளர்த்துக்கொள்ளும் விதமாக தலைவர்கள், அறிஞர்கள் படங்கள், அவர்கள் கூறிய கருத்துகள், பொது அறிவுகள் சுவர் முழுவதும் எழுதப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிக்கூடங்களை நோக்கி படையெடுக்கிற மக்களின் கவனத்தை அரசு பள்ளியின் பக்கம் திரும்ப வேண்டும் என, பள்ளியின் முன்னாள் மாணவர் வை.கோவிந்தராசு 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்தார். நானும் எனது பங்குக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கியுள்ளேன். மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என பள்ளியில் புதிதாக சேரும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் பெயரில் தலா 1,000 ரூபாய் வீதம் அஞ்சலகத்தில் வைப்பு வைக்கப்படும்.
மேலும் படிப்பதற்கு தேவையான அனைத்துமே வழங்கப்படுகிறது. அத்துடன் புதிதாக சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து முதலிடம் பெறும் நபருக்கு 10 ஆயிரம், இரண்டாம் இடம் பெறும் நபருக்கு 5 ஆயிரம், மூன்றாமிடம் பெறும் நபருக்கு 2,500 ரூபாய் ஊக்கதொகை வழங்கப்பட உள்ளது. தொலைத்தூரத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு வாகன வசதி, 10-ம் வகுப்பு பொது தேர்வில், முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசும், 450-க்கு மேல் மதிப்பெண் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் 11-ம் வகுப்பில் சேருவதற்கான கல்வி செலவும் வழங்குவோம்” என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
