"சின்ன ஆசை தான்.. ஆனா ரொம்ப நாள் இதுக்காக ஏங்கிருக்கேன்".. அப்பா, அம்மாவுக்கு மகன் கொடுத்த சர்ப்ரைஸ்.. கண்கலங்கிய நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனது அப்பா அம்மாவை பிசினஸ் கிளாஸ் விமானத்தில் அழைத்துச் செல்ல ஆசைப்பட்ட நபர் ஒருவர், அதனை நிறைவேற்றிய விதம் குறித்து எழுதிய பதிவு தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் கவுரவ் சப்னிஸ். இவர் தற்போது அமெரிக்காவில் உள்ள ஸ்டீவன்ஸ் ஸ்கூல் ஆஃப் பிசினஸ்-ல் அசோசியேட் ப்ரொஃபசராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது அப்பா மற்றும் அம்மாவை பிசினஸ் கிளாஸ் விமானத்தில் அமெரிக்கா அழைத்துச் சென்றது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். இது பலரையும் கண்கலங்க வைத்திருக்கிறது.
முதன் முறையாக
கவுரவ் அதில்," முதன் முறையாக எனது பெற்றோரை பிசினஸ் கிளாஸ் விமானத்தில் அமெரிக்காவுக்கு அழைத்து வந்திருக்கிறேன். வளர்ந்துவிட்டதாக உணர்கிறேன். இறுதியாக அவர்கள் பயணத்தின்போது நிம்மதியாக உறங்க முடிந்தது. எனது அம்மாவின் சிறிய வாழ்க்கையில் இது மகிழ்ச்சியை கொடுக்கும் என நம்புகிறேன். அவர் ஒரு குழந்தையை போல மாறும் தருணம் அதுவாகத்தான் இருக்கும்" எனக் குறிப்பிட்டுளளார்.
அம்மாக்களின் சிரமங்கள்
தனது சிறிய வயதில் நடந்த சம்பவங்கள் குறித்து கவுரவ்," புனே மற்றும் இந்தூர் செல்லும்போது அம்மா மிகக்குறைவாகவே தண்ணீர் குடிப்பார். அது ஏன் என எனக்கு புரிந்ததே இல்லை. பேருந்து ஓய்வுக்காக நிறுத்தப்படும்போது, நான் ஏதாவது மறைவான மூலைக்கு சென்று சிறுநீர் கழிப்பேன். ஆனால் பெண்களுக்கு போதுமான கழிப்பறைகள் அந்த காலத்தில் மிகக்குறைவு. வயதான பிறகே அம்மாவின் செயல்களுக்கான அர்த்தம் புரிந்தது. ஆனால், இந்த விமானத்தில் அவர் சுகாதாரமான கழிப்பறை வசதியுடன் தூங்கியபடி அமெரிக்காவுக்கு வரலாம் என்பதை நினைக்கையில் சாதித்துவிட்டது போல உணர்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிறந்தநாள்
கடந்த 2020 ஆம் ஆண்டு, தனது அம்மாவின் பிறந்தநாளை கொண்டாட இந்தியாவுக்கு வர திட்டமிட்டதாக குறிப்பிட்டுள்ள கவுரவ்," 2 வருடங்கள் கழித்து எனது பெற்றோரை பிசினஸ் கிளாஸ் விமானத்தில் அமெரிக்கா அழைத்துவந்து இங்கே அவரது பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டேன்.அது தற்போது நிறைவேறியுள்ளது. சிறிய ஆசை தான். ஆனால், இதற்காக இரண்டு வருடங்கள் நான் காத்திருந்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தனது தாய் மற்றும் தந்தையை அமெரிக்காவுக்கு பிசினஸ் கிளாசில் அழைத்துச் சென்றது குறித்து கவுரவ் எழுத, தற்போது நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
Also Read | தமிழ் எழுத்துக்களால் ஆனந்த் மஹிந்திராவை வரைந்த இளைஞர்.. வைரல் கேப்ஷனுடன் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ..!