"யூடியூப்-ஐ விட்டு வெளியேறத் தயார்"!.. கசப்பான அனுபவங்களால்... வைரல் சிறுவன் ரித்விக்-இன் பெற்றோர் வேதனை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jul 22, 2021 05:14 PM

Rithu Rocks என்கிற யூடியூப் சேனல் மூலம் சில தினங்களுக்கு முன் வைரலான சிறுவன் ரித்விக்-இன் தந்தை வெளியிட்டுள்ள அறிக்கை, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

rithu rocks channel rithvik parents emotional message details

கோவையைச் சேர்ந்த 7 வயதான ரித்விக், 'ரித்து ராக்ஸ்' என்ற யூடியூப் சேனல் மூலம் கலக்கிக் கொண்டிருக்கிறார். டிவி மீடியாக்களில், செய்திகள் சொல்லப்படும் விதத்தை, ரித்து தனி ஒருவனாக பல வேடங்களில் கலாய்த்து வெளியான வீடியோ சமீபத்தில் வைரலானது.

இதையடுத்து பல மீடியாக்கள் சிறுவனிடம் பேட்டி எடுத்தனர். அப்போது ரித்விக் ஒரு வசனம் பேச பத்து டேக் எடுப்பேன் எனக் கூறியிருந்தார்.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலர் எதிர்மறையான கருத்துகளை தெரிவித்ததை தொடர்ந்து, சிறுவன் ரித்விக்கின் தந்தை இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில், "நான் ஜோதிராஜ் ரித்விக்கின் தந்தை. கடந்த வாரம் ரித்விக் நடித்து யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி மிகப்பெரிய வைரல் ஆனது. பொதுமக்களும் ஊடகங்களும் வெகுவாக பாராட்டினர். தற்போது ரித்விக் குறித்து நேர்மறையான விமர்சனங்கள் அதிகம் இருந்தாலும், சில எதிர்மறையான விமர்சனங்களையும், விவாதங்களையும் நான் பார்க்கிறேன்.

விமர்சனங்கள் அனைத்திற்கும் நான் மதிப்பளிக்கிறேன். சில விளக்கங்களை மட்டும் இந்த பதிவில் சொல்ல விரும்புகிறேன். முதலில் இந்த காணொளிகள் ரித்விக் விரும்பி என்னை கேட்டதால் மட்டுமே உருவாக்கினோம். ரித்விக்கே பல வசனங்களை சொல்வார். பல காட்சிகளை உருவாக்குவார். இவை அனைத்தும் நான், ரித்விக் மற்றும் எனது மனைவி மூவரும் மகிழ்ச்சியாக கலந்து பேசிக்கொள்வோம். இறுதியாக ரித்விக்தான் கதையை முடிவு செய்வார்.

சமீபத்ய ரித்விக்கின் காணொளி வைரலானதை அடுத்து, நான், ரித்விக் மற்றும் எனது மனைவியும் பல ஊடகங்களில் கலந்துகொண்டு, வைரலான காணொளி குறித்து கருத்துகளை கூறியுள்ளோம். அதில் ரித்விக் பல பேட்டிகளில் பத்து மணிநேரம் படப்பிடிப்பு நடக்கும். பத்து டேக் எடுப்பேன் என்று கூறியுள்ளார். நானும் அதை கூறியுள்ளேன்.

எங்களது ஒரு காணொளியை ஒரே நாளில் எடுப்பது இல்லை. மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும். ஞாயிறு அன்று இரண்டு மணி நேரம் நான் கதை வசனம் எழுதுவேன். திங்கள் அன்று ரித்விக்கின் மூன்று மணி நேரம் ஆன்லைன் வகுப்புகள் முடிவடைந்ததும் மதிய உணவிற்கு பிறகு ரித்விக் சிறிது ஓய்வு எடுப்பார். பின் மாலை 4 அல்லது 5 மணிக்கு எங்களது படப்பிடிப்பு தொடங்கும். முதல் நாள் மூன்று மணி நேரம் படப்பிடிப்பு நடத்துவோம்.

எங்களது வீடு பிரதான சாலையை ஒட்டியுள்ளதால் அதிகளவில் வாகனங்கள் செல்லும், அந்த சத்தம் வரும்போது காணொளியை நிறுத்த வேண்டி இருக்கும் இதனால் முதல் நாள் படப்பிடிப்பு மூன்று மணி நேரம் ஆகும். வாகன சத்தம் இல்லாமல் இருந்தால் அதிகபட்சம் 1 மணி நேரத்தில் முதல் நாள் படப்பிடிப்பு முடிந்துவிடும். இரண்டாவது மற்றும் மூன்றாவது நாளும் முதலில் நான் சொன்னதுபோல் ரித்விக்கின் ஆன்லைன் வகுப்பு முடிந்து மதிய உணவு ஓய்வுக்கு பிறகு இரண்டில் இருந்து மூன்று மணி நேரம் படப்பிடிப்பு நடைபெறும்.

மூன்று நாட்களின் மொத்த படப்பிடிப்பு நேரத்தைத்தான் நாங்கள் பத்து மணி நேரம் ஆகும் என்பதை கூறியுள்ளோம். இதை நாங்கள் ஊடகத்தில் சரியாக பதிவு செய்யாததால் சிலர் இதை தவறாக புரிந்துகொண்டு எதிர்மறை கருத்துகளை பதிவு செய்கிறார்கள். நானும் எனது மனைவியும் ஒருபோதும் ரித்விக்கிற்கு அழுத்தம் கொடுத்தது கிடையாது. ரித்விக் எனது வசனங்களை கேட்டு மிகவும் சிரித்து மகிழ்வார்.

முக்கியமாக பெற்றோர்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால், ரித்விக் காணொளியை பார்த்து உங்கள் குழந்தைகளை ஒப்பீடு செய்து ரித்விக் காணொளி போலவே உருவாக்க வேண்டும் என குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம். உங்கள் குழந்தைகள் ரித்விக்கை விட வேறு விஷயங்களில் அதிக திறமை படைத்தவர்களாக இருக்கலாம். குழந்தைகளின் விருப்பம் என்னவோ அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

           

மற்றவர்களோடு ஒப்பீடு செய்யாதீர்கள். உங்கள் குழந்தையின் தனித்திறமையை கண்டறிந்து அதற்கு ஊக்கம் கொடுங்கள். மேலும் எங்களுக்கு பணம் சம்பாதிக்கும் நோக்கம் இருந்தால் தினம் ஒரு காணொளி போட முடியும். ஆனால், ரித்விக் இதை பொழுதுபோக்காக செய்வதால் வாரம் ஒரு காணொளி மட்டுமே பதிவேற்றம் செய்கிறோம்.

நீங்கள் கேட்கலாம் பின் எதற்கு ஒரு தனியார் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்தீர்கள் என்று, காரணம் நாங்கள் ரசித்த காணொளியை மக்களும் ரசிக்க வேண்டும் இதை எல்லோரிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்று நானும், எனது மனைவியும் ஆசைப்பட்டோம். அவ்வளவுதான்.

இந்த நொடியே ரித்விக் எனக்கு நடிக்கப் பிடிக்கவில்லை என்று சொன்னால் மறுகணமே நாங்கள் யூடியூபை விட்டு வெளியேறிவிடுவோம். மேலும், மக்களை எங்களால் முடிந்தவரை மகிழ்விக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். நாங்கள் ஆபாசமான காட்சிகளையோ, ஆபாச வசனங்களையோ பயன்படுத்தவில்லை. ஒருவேளை இந்த காணொளிகளின் வசனங்களோ, காட்சியோ உங்களை சங்கடப்படுத்தி இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

தற்போது வருடம் முழுவதும் குழந்தைகள் படிக்கும் கல்வி அவர்களின் வயதிற்கு ஏற்றதுபோல் உள்ளதா என ஆரோக்கியமாக விவாதிப்போம். சில விமர்சனங்கள் எங்களை காயப்படுத்துகிறது. எது நடந்தாலும் நாங்கள் மக்களை மகிழ்வித்துக்கொண்டே இருப்போம். நிரந்தரம் இல்லாத இந்த மனித வாழ்க்கையில், இருக்கும் வரை மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டு செல்வோம். ரித்விக்கி்ற்கு கிடைத்த இந்த புகழை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது நிலைக்குமா என்றுகூட எங்களுக்கு தெரியாது. எது நடந்தாலும் மகிழ்ச்சியோடு நாங்கள் நாங்களாகவே இருக்கிறோம்." இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rithu rocks channel rithvik parents emotional message details | Tamil Nadu News.