‘ஐயா கொஞ்சம் உதவுங்க’... ‘கையில் 7 வயது மகள்’... 'கண்ணீர்விட்டு கதறிய தந்தை'!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Sep 04, 2019 11:28 AM
ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், மருத்துவமனையில் இருந்து 7 வயது மகளின் சடலத்தை தந்தை சுமந்து சென்ற அவலம் நடைப்பெற்றுள்ளது.
தெலுங்கானா மாநிலம், பொத்தப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கூனுறு கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத். இவருடைய மகள் 7 வயதான கோமளா. கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவரை, கரீம்நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், கோமளாவிற்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து, சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த திங்கள்கிழமையன்று சிகிச்சை பலனின்றி, கோமளா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் சம்பத் கையில் பணம் இல்லாததால், சொந்த ஊருக்கு மகளின் சடலத்தை கொண்டு செல்ல, ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்தித் தரும்படி மருத்துவமனை நிர்வாகத்திடம் கெஞ்சிக் கேட்டார். ஆனால், மருத்துவமனை நிர்வாகத்தினர் ஆம்புலன்ஸ் இல்லை என கூறிவிட்டனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல், சுமார் 2 மணிநேரம் மருத்துவமனை முன்பு சம்பத் கண்ணீருடன் தவித்தார். யாரும் எந்த உதவியும் செய்யாததால், மகளின் சடலத்தை கையில் ஏந்தியபடி மருத்துவமனைக்கு வெளியே வந்தார்.
50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனது ஊருக்கு, மகளை தோளில் சுமந்தபடி நடந்து செல்ல முடிவு செய்து மருத்துவமனை வளாகத்திலிருந்து நடக்க ஆரம்பித்தார். 500 மீட்டர் தூரம் சென்றநிலையில், அவரது பரிதாப நிலைமையை கண்டு மனமிறங்கிய ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், ஆட்டோவில் கோமாளாவின் சடலத்தை ஏற்றிக்கொண்டு, சம்பத்தின் சொந்த ஊருக்கு அழைத்து சென்றார். இந்த சம்பவம் நடைப்பெற்ற மாவட்டம், தெலுங்கானா சுகாதாரத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டம் ஆகும். அங்கேயே இலவச ஆம்புலன்ஸ் இல்லாதது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.