'கொட்டிய மழை'...'அடர்ந்த இருள்'...'பதறிய இளம் பெண்'...நெகிழ வைத்த 'அரசு பஸ் கண்டக்டர், டிரைவர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Nov 02, 2019 12:54 PM

கேரள அரசு பஸ் கண்டக்டர், டிரைவர் செய்த செயல், கேரளாவை தாண்டி இருவருக்கும் பாராட்டுகளை பெற்று தந்து கொண்டிருக்கிறது. அதுகுறித்து நெகிழ வைக்கும் நிகழ்வை தற்போது காண்போம்.

KSRTC crew stand guard for woman passenger win hearts

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் இளம் பெண் எல்சினா. பெங்களூருவில் உள்ள கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்த இவர்,  கல்லூரியில் ஆராய்ச்சி கட்டுரை சமர்பிப்பதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதற்கான ஆய்வு பணிகளில் ஈடுபடுவதற்காக எர்ணாகுளத்திற்கு வந்திருந்தார். இதற்காக மதுரையில் இருந்து எர்ணாகுளம் செல்லும் கேரள அரசு பேருந்தில் பயணம் செய்த எல்சினா, தன்னை அழைத்து வருமாறு தனது உறவினருக்கு தகவல் தெரிவித்திருந்தார்.

இதனிடையே எல்சினா இறங்க வேண்டிய இடமான காஞ்சிரப்பள்ளி பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் வந்தது. கடுமையான மழையின் காரணமாக கடைகள் அடைக்கப்பட்டு, மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதியே மயான அமைதியில் இருந்தது. இதற்கிடையே எல்சினா தனது உறவினரை தொடர்பு கொண்டு எங்கு இருக்கிறீர்கள் என கேட்க, அவர் கடுமையான மழையின் காரணமாக வருவதற்கு அரை மணி நேரத்திற்கு மேல் ஆகும் என கூறியுள்ளார்.

இதனால் பதறி போன எல்சினா, தனியாக எப்படி இங்கு நிற்க முடியும் என எண்ணியுள்ளார். இதனை கவனித்த கேரள அரசு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் விவரங்களை எல்சினாவிடம் கேட்டுள்ளார். அதற்கு, உறவினர் வர அரை மணிநேரம் ஆகும் என்ற தகவலை எல்சினா, பஸ் கண்டக்டர், டிரைவரிடம் கூறியுள்ளார். சூழ்நிலையினை உணர்ந்த இருவரும், இளம்பெண் எல்சினாவை தனியாக விட்டு செல்ல மனம் இல்லாமல், மாணவியின் உறவினர் வரும் வரை காத்திருந்து, மாணவியை அவரிடம் ஒப்படைத்த பின்பு புறப்பட்டு செல்வோமா என, பேருந்தில் இருந்த பயணிகளிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு பேருந்தில் இருந்த பயணிகளும் சம்மதிக்க எல்சினாவின் உறவினர் வரும் வரை டிரைவரும், கண்டக்டரும், பஸ் பயணிகளும் காத்திருந்தனர். அவர் வந்ததும் எல்சினாவை அவரிடம் பத்திரமாக ஒப்படைத்த பின்பு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். பஸ் கண்டக்டர், டிரைவர், மற்றும் பேருந்தில் இருந்த பயணிகளின் செயலுக்கு எல்சினாவின் உறவினர் கைகூப்பி நன்றி தெரிவித்தார். இந்த சம்பவத்தை பேருந்தில் இருந்த பயணி ஒருவர் சமூகவலைத்தளங்களில் பதிவிட அது வைரலானது.

இந்நிலையில் மாணவியின் பாதுகாப்பிற்காக இருந்த பஸ் கண்டக்டர் ஷாஜுதீன், டிரைவர் டென்னிஸ் சேவியர் ஆகியோருக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவித்த வண்ணம் உள்ளது. மனிதநேயம் இது போன்ற நபர்கள் மூலமாக இன்னும் இருக்கிறது என பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

Tags : #KERALA #KSRTC #PASSENGER #GUARD