‘ஜெகன் மோகனின் அடுத்த அதிரடி’... ‘இத்தனை தலைநகரங்களா?’
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Aug 27, 2019 05:58 PM
ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு புதிய தலைநகரங்களை உருவாக்க, அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்றது முதல் அம்மாநிலத்துகான பல்வேறு புதிய திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அந்தவகையில், அமராவதியை மாநிலத்தின் தலைநகராக அமைப்பதற்கான அனைத்து திட்டங்களையும் கைவிட்டு, அதற்குப் பதிலாக மாநிலத்தை உள்ளடக்கிய 4 பகுதிகளைத் தலைநகராக உருவாக்க முடிவு செய்துள்ளார். இது தொடர்பான திட்டத்தை மத்திய அரசிடம், ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளதாக, பா.ஜ.க மாநிலங்களவை எம்.பி டி.ஜி.வெங்கடேசன் கூறியுள்ளார்.
அதன்படி விஜயநகரம், காக்கிநாடா, கடப்பா மற்றும் குண்டூர் ஆகிய 4 நகரங்களை தலைநகரங்களாக அறிவிக்க திட்டமிட்டுள்ள ஜெகன்மோகன் ரெட்டி, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த போது இதுகுறித்து விளக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 4 தலைநகரங்களுக்கும் பிரதிநிதிகளாக, 5 துணை முதல்வர்களை இந்த ஆண்டுக்குள் ஜெகன் மோகன் ரெட்டி நியமிக்க உள்ளார். இதன்மூலம், பரவலாக்கப்பட்ட ஆந்திராவின் வளர்ச்சிக்கு துணை முதல்வர்கள் உறுதியாக இருப்பார்கள் என கூறப்படுகிறது.
முன்னாள் முதல்வர் சந்திரபாபுவின் எண்ணமான அமராவதியை ஆந்திர தலைநகராக மாற்றுவதற்கான திட்டத்தை நீண்டகாலமாக ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எதிர்த்து வருகிறது. அம்மாநில அமைச்சர் போட்ஸா சத்யநாராயணா, அண்மையில் பேசுகையில், `அமராவதி மாநிலத்தின் தலைநகராக இருப்பது பாதுகாப்பற்றது. ஏனெனில், அது வெள்ளபாதிப்புகளுக்குள்ளாகும் பகுதியில் அமைந்துள்ளது. மேலும், தலைநகராக அமராவதியை உருவாக்குவதற்கான பல மடங்கு தொகை செலவிட வேண்டியிருக்கும்’ என்று கூறியிருந்தார்.