‘கல்லையும், கட்டையையும் வச்சு அடிச்சாங்க’.. ‘மக்கள் கொடுக்கும் பரிசு இதுதானா?’.. சென்னை டாக்டர் கண்ணீர் மல்க உருக்கம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 20, 2020 06:09 PM

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சென்னை மருத்துவர் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறித்து சக மருத்துவர் ஒருவர் கண்ணீர் மல்க தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Chennai doctor emotional statement on Kilpauk doctor funeral issue

சென்னை கீழ்பாக்கத்தில் மருத்துவமனை நடத்தி வந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் சைமன் (56) என்பவருக்கு கடந்த 4ம் தேதி கொரோனா அறிகுறி இருந்ததால் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுது செய்யப்பட்டது. இதனால் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி டாக்டர் சைமன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை அடுத்து அவரது உடலை அடக்கம் செய்வதற்காக கீழ்ப்பாக்கம் வேலாங்காடு இடுகாட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினர். அப்போது அங்கிருந்த சிலர் மனிதாபிமானம் இல்லாமல் கற்களால் ஆம்புலன்ஸ் வாகனத்தை தாக்கினர்.

தகவலறிந்த சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் சுகாதார ஊழியர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் மற்றொரு ஆம்புலன்ஸில் மருத்துவரின் உடலை எடுத்துக்கொண்டு போலீசார் வேலங்காடு இடுகாட்டிற்கு சென்றனர். அப்போது பொதுமக்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களை போலீசார் விரட்டியடித்து, பெரும் போராட்டத்திற்கு பின் மருத்துவரின் உடல் நல்லடக்கம் செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து தெரிவித்த சக மருத்துவர் பாக்கியராஜ்,‘நேற்றைய தினம் டாக்டர் சைமன் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். 15 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் நடந்த சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அவருடைய உடலை 9 மணியளவில் பெற்று அடக்கம் செய்ய முயற்சி செய்தோம். ஆனால் பொதுமக்கள் அவரை எங்கேயும் அடக்கம் பண்ணவிடவில்லை. அதற்கு முறையான அனுமதியை நாங்கள் வாங்கியிருந்தோம். அரசு அனைத்து உதவியும் செய்தது.

ஆனால் எங்கேயும் அவரை அடக்கம் பண்ணவிடாமல் தடுத்துவிட்டார்கள். இதை நான் கண்ணீருடன் பதிவிடுவதற்கு காரணம், இந்த உலகத்துக்கு தன்னை சிறந்த மருத்துவர் நிரூபித்தவர் மருத்துவர் சைமன், ஆனால் அவரை அடக்கம் பண்ணுவதற்கு மக்கள் அனுமதிக்கவில்லை. யாரால் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வந்ததென்று உங்களுக்கே தெரியும். மக்களை அவர் பார்க்கவில்லை என்றால் அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருந்திருப்பார். அவருக்கு கொரோனா பாதிப்பு வந்திருக்காது.

நேற்றைய தினம் ஒரு இடத்தில் அரசாங்க உதவியுடன் அவரின் உடலை அடக்கம் பண்ணலாம் என்று போனோம். அப்போது 50 அடியாட்கள் மாதிரி வந்து கல்லையும், கட்டையையும் வச்சு எல்லோரையும் அடிச்சாங்க. இதில் காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கார்கள். எங்களுக்கு எல்லாமும் ஆன டாக்டர் சைமனை அப்படியே போட்டுவிட்டு அங்கிருந்த ஓடி வரும் நிலைமைக்கு தள்ளப்பட்டோம்.

அதன்பின்னர் என்னுடைய நண்பர் டாக்டர் பிரதீப்பும், இன்னொரு நண்பரும் சேர்ந்துதான் மருத்துவரின் இறுதி சடங்கை செய்தனர். மருத்துவமனையில் வேலை பார்க்கும் மருத்துவர்கள் இந்த நோயினால் இறந்துபோனால் இதுதான் நிலைமையா? மக்கள் கொடுக்கும் பரிசு இதுவா? எப்படி மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இருக்கும்? இந்த வீடியோவை வெளியிடுவதற்காக நான் வெட்கப்படுகிறேன், தலைகுணிகிறேன்.

ஏனென்றால் நாங்கள் இவ்வளவு பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் காப்பாற்ற முடியாமல், கடைசியில் அவரை அடக்கம் பண்ணக்கூட முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கோம். எப்படி அவரின் ஆன்மா சாந்தி அடையும்? எதற்கு இந்த மருத்துவப்பணிக்கு வந்தோம் என வெட்கப்படுகிறேன். என்னுடைய இந்த வார்த்தைகளுக்காக மன்னித்துவிடுங்கள். எந்த ஒரு மனிதனுக்கும் இப்படியொரு நிலைமை வரக்கூடாது. அரசாங்கம் இன்னும் இதில் கவனம் செலுத்த வேண்டும். எங்களுடைய மருத்துவர் மனிதாபிமானத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். தயவுசெய்து மக்கள் தங்களது மனதில் மாற்றத்தை கொண்டு வாருங்கள்’ என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.