கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் உணவு விநியோகம்.. வெளியான அதிர்ச்சி வீடியோ.. உபி அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேச மாநிலத்தில் கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு பரிமாறப்படும் வீடியோ வெளியாகி பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், மாவட்ட விளையாட்டு அதிகாரியை பணியிடை நீக்கம் செய்திருக்கிறது அம்மாநில அரசு.

கபடி போட்டிகள்
உத்தர பிரதேச மாநிலத்தின் சஹாரன்பூரில், 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்றன. 3 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் வீராங்கனைகளுக்கு அங்கிருந்த கழிவறையில் வைத்து உணவு பரிமாறப்பட்டதாக தெரிகிறது. கழிவறையில் உணவு சமைக்கும் பாத்திரங்களும், அதன் அருகே பேப்பரில் பூரிகள் வைக்கப்பட்டும் இருந்திருக்கின்றன. வீடியோவில் கழிவறையில் பரிமாறப்பட்ட உணவினை ஒரு வீராங்கனை பெற்றுச் செல்வதும் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவை வீராங்கனை ஒருவர் எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டதாக சொல்லப்படுகிறது. கழிவறையில் வைத்து உணவு பரிமாறப்படும் இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில், எதிர்க்கட்சிகள் இதுகுறித்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், சஹாரன்பூர் விளையாட்டு அதிகாரி அனிமேஷ் சக்சேனாவை, உத்தர பிரதேச அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது.
இந்நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரி அனிமேஷ் சக்சேனா இதுகுறித்து பேசுகையில்,"மழை பெய்ததால் நீச்சல் குளத்திற்கு அருகே உணவு சமைக்க ஏற்பாடு செய்தோம். விளையாட்டு மைதானத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்ததால் நீச்சல் குளத்திற்கு அருகில் உள்ள உடை மாற்றும் அறையில் உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன" என்றார்.
நடவடிக்கை
இதனிடையே சஹாரன்பூர் மாவட்ட ஆட்சியர் அகிலேஷ் சிங் இதுபற்றி பேசுகையில்," கபடி போட்டிகளின்போது செய்யப்பட்ட வசதிகள் குறித்து புகார்கள் வந்தன. இதுகுறித்து 3 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருக்கிறேன். தவறு செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். மேலும், விளையாட்டு ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டிருப்பதாகவும் ஒப்பந்ததாரர் பெயர் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
