ராணியின் இறுதி ஊர்வலத்தை காண ஓடோடிவந்த இரண்டாம் எலிசபெத்தின் விருப்பத்திற்குரிய குதிரை.. விசுவாசத்தை கண்டு கண்ணீர் சிந்திய மக்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலத்தை காண அவருடைய ஆஸ்தான குதிரையும் வந்திருந்தது காண்போரை கண்கலங்க செய்திருக்கிறது. மேலும், இந்த குதிரை சோகத்துடன் தலையை தாழ்த்தியபடி நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
இரண்டாம் எலிசபெத்
பிரிட்டனில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952-ம் ஆண்டு மரணம் அடைந்தபோது ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இரண்டாம் எலிசபெத். அப்போது அவருக்கு வயது 25. பிரிட்டன் வரலாற்றில் நீண்டகாலம் ராணியாக இருந்த பெருமை இரண்டாம் எலிசபெத்திற்கு உண்டு. அவருடைய ஆட்சிக்காலத்தில் 15 பிரதமர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்திருக்கிறார். நெடுநாள் ராணியாக பதிவி வகித்த அவர் கடந்த 8 ஆம் தேதி தன்னுடைய 96 வயதில் காலமானார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்தின் வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் ராணியின் உடல் ஒருவாரம் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் காலை ராணியின் உடல் வெஸ்ட்மினிஸ்டர் அபேவிற்கு ராஜ மரியாதையுடன் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கே உலக தலைவர்கள் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இறுதியாக விண்ட்சருக்கு கொண்டுசெல்லப்பட்ட உடல் அங்கே நல்லடக்கம் செய்யப்பட்டது.
எம்மா
இங்கிலாந்து ராணியின் இறுதி ஊர்வலத்தை காண ஏராளமான பொதுமக்கள் சாலை ஓரத்தில் நின்றிருந்தனர். 70 ஆண்டுகள் ராஜ்யத்தின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத்திற்கு அஞ்சலில் செலுத்தும் வகையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த வழியில் திரண்டிருந்தனர். அப்போது ராணியின் விருப்பத்திற்குரிய குதிரையான எம்மாவும் தனது ராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்திருக்கிறது.
ராணியின் தலைமை க்ரூமர் டெர்ரி பெண்ட்ரி எம்மா குதிரையுடன் விண்ட்சர் கோட்டைக்கு வெளியே காத்திருக்கும் புகைப்படம் பலரையும் கண்கலங்க செய்திருக்கிறது. ராணியின் உடல் அரச மரியாதையுடன் எடுத்துவரப்பட்ட வேளையில், டெர்ரி பெண்ட்ரியும், எம்மாவும் அசையாமல் நின்று ராணிக்கு அஞ்சலி செலுத்திய காட்சி காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்தது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபேவில் இருந்து 40 கிலோமீட்டர் பயணித்து விண்ட்சர் கோட்டைக்கு வந்திருக்கிறது இந்த குதிரை.
தன்னுடைய 90 வயதிலும் ராணி இந்த குதிரை மீது சவாரி செய்ததாக டெர்ரி தெரிவித்திருக்கிறார். பொதுவாக குதிரைகள் மற்றும் நாய்க்குட்டிகள் மீது அதிகளவில் பாசம் கொண்டவர் இரண்டாம் எலிசபெத். அவர் செல்லமாக வளர்த்த மியூக் மற்றும் சாண்டி ஆகிய இரண்டு நாய்களும் ராணியின் உடல் வரும் வழியில் பணிந்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நின்றிருந்த காட்சி பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது. இந்நிலையில் இந்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.