அடுத்த வாரம் கல்யாணம்.. அப்பாவுக்கும் மணமகளுக்கும் வந்த வாக்குவாதம்.. கோவத்துல தந்தை செஞ்ச பகீர் காரியம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேசத்தில் பெற்ற தந்தையே மகளை கொலை செய்த சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது.
திருமணம்
உத்திர பிரதேச மாநிலம் ஹபூர் பகுதியை சேர்ந்தவர் முகமது ஃபரியாத். 55 வயதான இவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஒருவரான ரேஷ்மா (வயது 21) எனும் இளம்பெண்ணுக்கு வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்காக திருமண வேலைகள் துரித கதியில் நடைபெற்று வந்திருக்கின்றன. இந்நிலையில், நேற்று காலை வெளியே சென்றிருந்த முகமது வீட்டுக்கு திரும்பியிருக்கிறார்.
அப்போது சாப்பாட்டை எடுத்துவரும்படி தனது மகளிடம் கூறியுள்ளார் முகமது. ஆனால், தாமதமாக சாப்பாட்டை கொண்டு வந்திருக்கிறார் ரேஷ்மா. இதனால் கோபமடைந்த முகமது மகளை வசைபாடியிருக்கிறார். இதனை அடுத்து இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது தனது தந்தையை ரேஷ்மா திட்ட, இதனால் கோபமடைந்த முகமது அவரை தாக்கியிருக்கிறார். இதனால் படுகாயமடைந்த ரேஷ்மா சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கிறார்.
விபரீதம்
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து காவல் துறையில் தகவல் அளித்திருக்கின்றனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் முகமதுவை கைது செய்திருக்கின்றனர். மேலும், உயிரிழந்த ரேஷ்மாவின் உடலை கைப்பற்றி அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இதுகுறித்து பேசிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முகேஷ் சந்திரா, “உயிரிழந்த பெண்ணின் தந்தையான முகமதுவின் மீது பாபுகார் காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவு 302 (கொலை) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படுவார்" என்றார்.
அடுத்த வாரம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணமகளை அவரது தந்தையே கொலை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.