"குண்டா இருக்கேன்னு டைவர்ஸ் கேக்குறாரு".. கண்ணீருடன் காவல்நிலையத்துக்கு சென்ற மனைவி.. உத்திர பிரதேசத்தில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேசத்தில் தனது உடல் பருமனை காரணம் காட்டி கணவர் விவாகரத்து கேட்பதாக பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

பருமன்
உத்திர பிரதேச மாநிலம் மீரட் நகரத்தின் ஜாஹிர் காலனியை சேர்ந்தவர் நஸ்மா. இவருக்கும் பதேபூர் பகுதியை சேர்ந்த சல்மான் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த தம்பதிக்கு 7 வயதில் ஓரு மகன் இருக்கிறான். இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு நஸ்மாவின் உடல் எடை கூடிவிட்டதாக காரணம் காட்டி விவாகரத்து செய்ய சல்மான் முடிவெடுத்ததாக தெரிகிறது. மேலும், இதுதொடர்பாக தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது. ஒருகட்டத்தில் தனது மனைவி நஸ்மாவை வீட்டை விட்டு வெளியேற்றியிருக்கிறார் சல்மான்.
புகார்
இதுகுறித்து பேசிய நஸ்மா,"நான் உடல் பருமனாக இருப்பதை கேலிசெய்துவந்தார் அவர். இந்நிலையில், விவாகரத்து கோரி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்" என்றார். வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நஸ்மா தனது கணவர் அனுப்பிய விவாகரத்து நோட்டீசை பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார். மேலும், இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்திருப்பதாகவும் நஸ்மா தெரிவித்திருக்கிறார். தனது கணவர் விவாகரத்து கோரிய நிலையில், தான் அவருடன் வாழ விரும்புவதாக கண்ணீருடன் கூறியுள்ளார் நஸ்மா.
விவாகரத்து
இதுபற்றி நஸ்மா பேசுகையில்,"எனக்கு விவாகரத்தில் உடன்பாடு இல்லை. நான் அவருடன் வாழ விருப்பப்படுகிறேன். ஆனால், என்னைப்போன்ற ஒருவருடன் வாழ விரும்பவில்லை என அவர் என்னிடம் பலமுறை கூறியிருக்கிறார். இருப்பினும் நான் அவருடன் இணைந்து வாழவே விரும்புகிறேன்" என்கிறார். இந்நிலையில் லிஸ்வாரி பகுதியில் அமைந்துள்ள காவல்நிலையத்தில் தனக்கு நீதிவேண்டி புகார் அளித்திருப்பதாகவும் நஸ்மா தெரிவித்திருக்கிறார்.
இருப்பினும், மீரட் நகரின் கோட்வாலி பகுதி சர்க்கிள் ஆபிசர் அரவிந்த் சௌராசியா இதுபற்றி பேசுகையில், "இது போன்ற எந்த வழக்கும் தனது கவனத்திற்கு வரவில்லை. மேலும், புகார் அளித்தால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளித்திருக்கிறார். உத்திர பிரதேச மாநிலத்தில் மனைவி குண்டாக இருப்பதாக கூறி கணவன் விவாகரத்து கோரிய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

மற்ற செய்திகள்
