'கண்ணுல பயத்தை பாத்தேன்'...'அந்த டிரைவரை திட்டாதீங்க'... 'கேரள வைரல் பெண்ணின் பரபரப்பு பேட்டி'!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Sep 28, 2019 11:31 AM
கேரள மாநிலத்தில் பாதை மாறி வந்த பேருந்திற்கு வழிவிடாமல் பெண் ஒருவர் நின்ற வீடியோ வெளியாகி வைரலானது. அந்த பெண்ணின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்த நிலையில், தான் உயிர் பிழைத்ததற்கு அந்த ஓட்டுநர் தான் காரணம் என 'நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகைக்கு அந்த பெண் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
சூர்யா மானீஷ் என்ற அந்த பெண் நடந்த சம்பவம் குறித்து கூறுகையில் '' சமூகவலைதளைங்களில் அந்த வீடியோ இந்த அளவிற்கு வைரலாகும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்த சம்பவத்தின் ஒரு பகுதி வீடியோ மட்டும் தான் அதில் இடம் பெற்றுள்ளது. நான் பேருந்து ஓட்டுநருக்கு எதிராக சவால் விடுவதற்காக அவ்வாறு சாலையில் நிற்கவில்லை. நான் அவ்வாறு நிற்பதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.
நான் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, எனக்கு முன்னால் ஒரு பள்ளி பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்து திடீரென இடது புறம் சென்று நின்றது. அந்த நேரத்தில் பள்ளி பேருந்து திரும்பியபோது, நான் சென்ற சாலையில் எதிரே அரசு பேருந்து ஒன்று மற்றோரு வாகனத்தை முந்தி கொண்டு வந்தது. அப்போது அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நான், என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் அப்படியே நின்றேன். அந்த பேருந்து வந்த வேகத்திற்கு என்ன வேண்டுமாலும் நடந்திருக்கலாம்.
ஆனால் ஓட்டுனரின் சாமர்த்தியாததால் தான் நான் தப்பினேன். அவர் சரியான நேரத்தில் பேருந்தின் வேகத்தை குறைத்து வலது புறமாக திருப்பி சென்றார். அதன் பின்பு தான் எனக்கு பயமே போனது. நான் 7 வருடமாக அந்த சாலையில் பயணம் செய்கிறேன். ஆனால் இது போன்று நடப்பது இதுதான் முதல் முறை'' என தெரிவித்துள்ளார்.
இதனிடையே அந்த பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கூறும்போது ''நான் சென்ற சாலையில் பள்ளி பேருந்து ஒன்று மாணவர்களை இறக்கி விட்டுக் கொண்டிருந்தது. அப்போது சாலையின் வலது புறம் காலியாக இருந்ததால் பேருந்தை வலது புறம் திருப்பினேன். அந்த நேரத்தில் சாலையில் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் நின்றதை பார்த்தேன். அவர் தனது வாகனத்தை நகர்த்தாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். இதையடுத்து நான் பேருந்தை சாலையின் இடது புறத்திற்கு கொண்டு சென்று, பேருந்து நிலையத்திற்குள் சென்றேன்'' என கூறியுள்ளார்.
இதற்கிடையே சமூகவலைத்தளங்களில் பலரும் பேருந்து ஓட்டுனரை வசைபாடிய நிலையில், தான் உயிர் பிழைத்ததற்கு அந்த ஓட்டுனரின் சாமர்த்தியம் தான் காரணம் என சூர்யா மானீஷ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.