‘நகைக் கடை ஊழியர்களுக்கு அடித்த பம்பர்’... ‘பண்டிகையில் வாங்கிய லாட்டரியால்’... ‘காத்திருந்த இன்ப அதிர்ச்சி’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Sep 20, 2019 05:33 PM

கேரளாவில் நகை கடை ஊழியர்களும், நண்பர்களுமான 6 பேர் சேர்ந்து வாங்கிய லாட்டரி சீட்டுக்கு, 12 கோடி ரூபாய் முதல் பரிசு கிடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Gold rush for jewellery employees as they hit Rs 12 crore

கேரள மாநிலத்தில் அரசு சார்பில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், பண்டிகைக் காலங்களின் போது பம்பர் குலுக்கல்களும் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி ஓணம் பண்டிகையையொட்டி, சுமார் 46 லட்சம் சிறப்பு லாட்டரி சீட்டுகள் அச்சிடப்பட்டன. முதல் பரிசு 12 கோடி ரூபாய் என்று அந்த லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. இதில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சுமார் 43 லட்சம் லாட்டாரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.

இந்த லாட்டரி சீட்டின் விலை 300 ரூபாய் ஆகும். கடந்த வியாழக்கிழமை அன்று, குலுக்கல் நடத்தப்பட்டு பரிசு பெற்றவர்கள் விவரமும், அறிவிக்கப்பட்டது. 12 கோடி ரூபாய் பரிசு என்பதால், அந்த அதிர்ஷ்டசாலி யார் என்பதை அறியும் ஆவல் அனைவரிடமும் ஏற்பட்டது. தற்போது முதல் பரிசுப் பெற்றவர்கள், 6 நண்பர்கள் என்பது தெரிய வந்துள்ளது. திருச்சூர் மாவட்டம் கருநாகப்பள்ளியில் உள்ள நகைக் கடை ஒன்றில், ஊழியர்களாக பணிபுரிந்து வருபவர்கள் ரதீஷ், விவேக், ரோனி, சுபின் தாமஸ், ராஜீவன், ரம்ஜீன்.

இவர்கள் ஆறுபேரும் ஓணம் பண்டிகைக்கு ஊருக்கு புறப்பட்டு சென்றபோது, அந்தப் பகுதியில் உள்ள சிவன்குட்டி என்ற லாட்டரி விற்பனையாளரிடம் இருந்து, அனைவரும் இணைந்து 600 ரூபாய்க்கு, 2 லாட்டரி சீட்டுகள் வாங்கியுள்ளனர். தற்போது அதில் ஒரு லாட்டரி சீட்டுக்குதான், 12 கோடி ரூபாய் பரிசு பணம் கிடைத்துள்ளது. பரிசு தொகை 12 கோடி ரூபாயில் இருந்து, வருமான வரி, ஏஜெண்டு ஊக்கத்தொகை போக, 7 கோடியே 56 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பரிசு அறிவிக்கப்பட்டதை அடுத்து மகிழ்ச்சி அடைந்த அவர்கள், இதனை நம்ப முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் பலமுறை லாட்டரி சீட்டுகள் வாங்கியுள்ளபோதும், தற்போதுதான் பரிசு கிடைத்துள்ளது என்று  கூறியுள்ளனர்.

Tags : #LOTTERY #KERALA #ONAM #FRIENDS