‘விதிகளை மீறிய அடுக்குமாடி குடியிருப்புகள்’... 'மின்சாரம், குடிநீர் வசதியை துண்டித்த கேரள அரசு'!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Sep 26, 2019 02:57 PM
கேரளாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உத்தரவிட்டநிலையில், அந்த கட்டிடத்தின் அடிப்படை வசதிகள் முதற்கட்டமாக நிறுத்தப்பட்டுள்ளன.

கேரள மாநிலத்தின் வணிக நகரமான கொச்சியில் உள்ளது மாராடு. இங்கு நீர்நிலைகளின் அருகே, 5 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இந்த அடுக்குமாடி கட்டிடங்களில், சுமார் 350 அபார்ட்மெண்ட்கள் உள்ளன. இதில் 1500 குடியிருப்பு வாசிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் விதிகளை மீறி நீர்நிலைகள் அருகே கட்டப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, இந்த அடுக்குமாடி கட்டிடங்களை இடித்து தள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து கேரள அரசு அதற்கான பணிகளில் ஈடுபட முயற்சித்தது. இதற்கு அங்கு வசித்து வரும் குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், வீடுகளை காலி செய்ய மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விதிகளை மீறிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களுக்கான மின்விநியோகம் கடந்த புதன்கிழமையன்று துண்டிக்கப்பட்டது. மேலும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளும் நிறுத்தப்பட்டன.
சமையல் எரிவாயு உள்ளிட்ட சேவைகளும் நிறுத்தப்பட்டன. அக்டோபர் முதல் வாரத்தில், அபார்ட்மெண்ட் இடிக்கப்படுவதையொட்டி, ஐஏஎஸ் அதிகாரியான சிநேகில் குமார் சிங் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கட்டிடங்களை இடிக்கும் பணி இரண்டு மாதத்தில் முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் விதிகளை மீறிய கட்டிட நிறுனம் மீது நடவடிக்கை எடுக்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
