பேங்க் அக்கவுண்ட் அபேஸ்.. ஆன்லைனில் ஷாப்பிங்.. திருடனுக்கு ஆதார் எண் மட்டும் போதும் போலிருக்கே? என்ஜினியருக்கு நேர்ந்த கதி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Dec 31, 2019 05:17 PM

மும்பையின் குர்கான் பகுதியைச் சேர்ந்தவர் அமேயா தாப்ரே. கணினி பொறியாளாராக பணியாற்றி வரும் இவர், கடந்த 2012-ஆம் ஆண்டு ஆதார் கார்டை பதிவு செய்துள்ளார். அதன் பின்னர் 3 வருடங்கள் கழித்து, அப்போது புனேவில் இருந்த இவரது வீட்டுக்கு போலீஸார் சென்றுள்ளனர். அவர்கள் தாப்ரேயிடம், பெண்ணொருவரை செல்போன் மூலம்  துன்புறுத்திய வழக்கு பற்றி விசாரித்துள்ளனர். அப்போதுதான், தாப்ரேவின் ஆதார் எண்ணை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிம் கார்டுகளை வாங்கியதும், பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

engineer faces many problems after his aadhar detail leaked

நாளடைவில் இந்த பிரச்சனை சரி ஆகிவிடும் என்று நினைத்த தாப்ரேவுக்கு மீண்டும் சோதனை தொடங்கியது. தாப்ரே தனது வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைக்கச் சென்றபோது, அவரது ஆதார் கார்டு வேறொரு வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்ததும், அதன் பேரால் தவறாக பயன்படுத்தப்பட்டிருந்ததும் தெரியவந்தது. பிறகு ஒருநாள் தன் பெயரை கூகுளில் டைப் செய்து பார்த்த தாப்ரேவுக்கு மேலும், காத்திருந்த அதிர்ச்சி சம்பவமாக, அவரது ஆதார் கார்டின் நகல் கூகுளில் இருந்ததையும், ஆன்லைன் ஷாப்பிங்குகளுக்கு அவரது ஆதார் எண் தவறாக பயன்படுத்தப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

இனியும் தாமதிக்க கூடாது என எண்ணிய தாப்ரே, ஆதார் எண் மையத்துக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவர்களோ, ஆதார் எண்ணை மாற்ற முடியாது. வேண்டுமென்றால் டி-ஆக்டிவேட் செய்யலாம். இதன் கீழ் செய்யப்பட்ட ஒவ்வொரு மோசடிக்கும் போலீஸாரிடத்தில் தனித்தனியே புகார் அளிக்கலாம் என்று ஆலோசனை வழங்கினர். எனினும் இதற்கு நிரந்தர தீர்வும் தீர்ப்பும் வேண்டும் என்று ஆதார் மையத்திடம் முறையிட்டுள்ள தாப்ரே, சைபர் க்ரைம் காவல் துறையிலும் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

தத்துக்குழந்தையை வளர்த்து வரும் தாப்ரேயின் வீட்டுக்கு முகமறியாத பலரும் வந்து, தாப்ரேவின் ஆதார் கார்டு மூலம் ஏமாற்றப்பட்டதாகக் குறிப்பிடுவதாகவும், ஒரு நாளைக்கு தனக்கு ஏகப்பட்ட மெசேஜ்கள் மற்றும் போன் கால்கள் வருவதாகவும், இவற்றுக்கு எல்லாம் தனது ஆதார் கார்டினை சிலர் தவறாக பயன்படுத்துவதுதான் என்றும் குறிப்பிட்டுள்ள தாப்ரே, இதனால் பெரும் நரக வேதனையை அனுபவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags : #MUMBAI #AADHAR