2020-ம் வருஷம் உங்க 'வேலை, தொழில்ல'... என்ன 'மாற்றத்தை' கொண்டு வரப்போகுது?... 12 ராசிக்கான பலன்கள் உள்ளே!

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்

By Manjula | Dec 31, 2019 05:05 PM

இன்னும் சிலமணி நேரங்களில் பிறக்கப்போகும் புத்தாண்டினை உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். சென்னை உள்ளிட்ட பெருநகரங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன. 2019-ம் ஆண்டு சிலருக்கு கஷ்டத்தை, ஏமாற்றத்தை அளித்திருக்கலாம். வேறு சிலருக்கு புதிய உற்சாகத்தை கொடுத்திருக்கலாம்.

NewYear 2020: Career and Jobs Horoscope 2020, Read here

எது எப்படி இருந்தாலும், வரப்போகும் புத்தாண்டு அனைவரது வாழ்விலும் நன்மையை வழங்கும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் புத்தாண்டினை வரவேற்க காத்துக் கொண்டுள்ளனர். அந்த வகையில் ஒவ்வொரு ராசிகளின் அடிப்படையில் இந்த புத்தாண்டு உங்களது தொழில் மற்றும் வேலையில் என்னவொரு மாற்றத்தினை கொண்டு வரப்போகிறது? என்பதை இங்கே பார்க்கலாம்.

மேஷம்

உங்களுக்கு இந்த புத்தாண்டு நல்லதொரு ஆண்டாக அமையும். இந்த வருடம் உங்களுக்கு வேலையில் பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். அதேபோல உங்களது சகோதரர்களுடனான உறவும், உங்களுக்கு இனிமையான ஒன்றாக மாறும். எனினும் வேலை தொடர்பான பிரச்சினைகள் குறித்து நீங்கள் அவர்களுடன் கோப்படும் சூழ்நிலை ஏற்படலாம். அப்படியொரு சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். நிலம், சொத்து தொடர்பான தொழிலை நீங்கள் தேர்ந்தெடுத்தால், வெற்றி வாய்ப்புகள் உங்களுக்கு பிரகாசமாக உள்ளது.

ரிஷபம்

இந்த ஆண்டு ஒரு கலவையான ஆண்டாக அமையக்கூடும். ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு எல்லாமே சாதகமாக இருக்கும். ஆனால் ஜூன் மாதத்திற்கு பின் உங்களுக்கு பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அதனால் உங்கள் வேலையில் நீங்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது இருக்கும். உங்கள் திட்டங்களை குறிப்பிட்ட காலக்கெடுவில் முடிப்பது உங்களுக்கு நன்மையை அளிக்கும். எனினும் ஆண்டு இறுதியில் உங்கள் சம்பளம் அதிகரிக்கவும், உங்களுக்கு வேறு நிறுவனங்களில் வேலை கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது.

மிதுனம்

இந்த ஆண்டு வேலையில் வெற்றிபெற நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். இந்த ஆண்டு நேரம் உங்கள் பொறுமையையும், திறமையையும் பெரிதும் சோதிக்கும். எனவே தோல்வி பற்றி கவலைப்பட வேண்டாம். இந்த ஆண்டு நீங்கள் விரும்பும் வேலையில் பொறுமையாக பணியாற்றுவது பொருத்தமானதாக இருக்கும். நீங்கள் வேலையில் ஒரு புதிய பொறுப்பை ஏற்றால், அதை எளிதாக ஏற்றுக்கொண்டு அதை எளிதாக முடிக்க முயற்சிக்கவும்.

கடகம்

இந்த ஆண்டு உங்களுக்கு இயல்பான ஒரு ஆண்டாகவே இருக்கும். அதிர்ஷ்டத்தை விட உங்கள் கடின உழைப்பே உங்களுக்கு வெற்றியை ஈட்டித்தரும். உங்கள் வேலையை சிறப்பான ஒன்றாக மாற்ற விரும்பினால், உங்கள் சக ஊழியர்களுடன் நேரம் செலவிடுங்கள். வேலையை வேலையாக மட்டும் கருதாமல் அதை உங்கள் வாழ்க்கையாக நினையுங்கள். உங்களுக்கு இந்த ஆண்டு சிறப்பான ஒரு ஆண்டாக அமையும். 

சிம்மம்

இந்த ஆண்டு உங்கள் தொழில் வாழ்க்கை புதிய உயரங்களை எட்டக்கூடும். நீங்கள் விரும்பிய அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். எனினும் உங்களது கடின உழைப்பு இல்லாமல் இது நடைபெறாது. இந்த ஆண்டு சனி பகவான் உங்களுக்கு 6-ம் இடத்தில் இருப்பதால், உங்கள் எதிரிகளை களத்தில் ஆதிக்கம் செலுத்துவீர்கள். போட்டிகளில் நீங்கள் பங்கெடுத்தால், கண்டிப்பாக வெற்றிவாகை சூடுவீர்கள்.

கன்னி

உங்களுக்கு இந்த ஆண்டு மிகவும் பிரகாசமான ஆண்டாக அமையக்கூடும். உங்களுக்கு வேலையில் மாறுதல் கிடைக்கலாம். அலுவலகத்தில் உள்ள மூத்த பணியாளர்களின் உதவியுடன் நீங்கள் வெற்றி படிக்கட்டுகளில் ஏறுவீர்கள். ஆனால் வேலையிடத்தில் உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகி இருங்கள். ஏனெனில் அவர்களால் உங்கள் இமேஜ் டேமேஜ் ஆக வாய்ப்புகள் இருக்கிறது.

துலாம்

இந்த ஆண்டு நல்ல முடிவுகளை பெற நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். அதேபோல உங்கள் தகவல் தொடர்பு திறனிலும் நீங்கள் கடுமையாக கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் இதன் வழியாக ஒரு நல்ல உறவை உருவாக்க முடியும். இதனால் உங்கள் யோசனைகளை உங்களது அதிகாரியின் மூலம் எடுத்துரைக்க முடியும்.

விருச்சிகம்

இந்த ஆண்டு உங்களுக்கு ஒரு கலவையான ஆண்டாக அமையக்கூடும். நீங்கள் தன்னம்பிக்கையை இழக்காமல் இருக்கும் பட்சத்தில், உங்களுக்கான புதிய வழிகளை நீங்கள் கண்டறிவீர்கள். சில சமயங்களில் அதிர்ஷ்டமும் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களது வேலையின் முடிவு பற்றி கவலைப்படாமல், அதிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? என்பதில் கவனம் செலுத்துங்கள்.

தனுசு

இந்த ஆண்டு உங்களுக்கு நல்லதொரு ஆண்டாக அமையும். உங்களுக்கு பதவி உயர்வு, வருமானம் ஆகியவை கண்டிப்பாக கிடைக்கும். 2020-ம் ஆண்டு உங்களுக்கு பயனுள்ள ஒரு ஆண்டாக ,அமையும். ஒரு வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து உங்களுக்கு சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. மொத்தத்தில் இந்த ஆண்டு உங்களுக்கு வெற்றி வாய்ப்பினை அதிகம் தரும் ஆண்டாக அமையும்.

மகரம்

இந்த ஆண்டு உங்களுக்கு சாதாரண ஆண்டாக இருந்தாலும், உங்கள் கடின உழைப்பு அதனை மாற்றியமைக்கக் கூடும். எம்.என்.சி(MNC) நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இந்த ஆண்டு பதவி உயர்வினை பெறுவார்கள். வணிகத்துடன் தொடர்புடையவர்கள் ஜூன் மாதம் முதல் நல்ல லாபம் பெறுவார்கள்.

கும்பம்

இந்த ஆண்டு உங்கள் பணியிடத்தில் உங்களுக்கு விரக்தி ஏற்படலாம். உங்கள் வேலை குறித்து உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை வரலாம். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் பொறுமையை இழக்காதீர்கள். இந்த ஆண்டு நீங்கள் ஒரு புதிய தொழிலை தொடங்கினால் உங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். குறிப்பாக ஏப்ரல்-ஜூன் மாதங்கள் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாதங்கள் ஆகும்.

மீனம்

வேலை, பணியிடங்களில் சற்று கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள். உங்களது சொந்த பலம், பலவீனங்களை நீங்களே ஆய்வு செய்யுங்கள். உங்களுக்கு பெரும் தொகை கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால் உங்களது நிதிச்சிக்கல்கள் மறைந்து போகக்கூடும். அதிர்ஷ்டம் இல்லாவிடினும், உங்களது கடின உழைப்பு உங்களுக்கு வெற்றிகளை ஈட்டித்தரும். 

Tags : #JOBS #NEWYEAR2020