ஷிப்ட் போட்டு 'எம்எல்ஏ'-க்கள் பாதுகாப்பு.. '2 நிமிட' அவகாசத்தில்.. பாஜக கோட்டையை 'சரித்த' இளம்பெண்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Nov 28, 2019 05:46 PM

ஷிப்ட் அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட எம்எல்ஏ-க்களை 2 நிமிட கேப்பில் மீட்டு பாஜக கோட்டையை இளம்பெண் ஒருவர் சரியச்செய்த சம்பவம் மஹாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது.

How student wing leader rescued 4 NCP MLAs from Gurgaon

மஹாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ், துணை முதல்வராக அஜித் பவார் இருவரும் பதவியேற்ற சம்பவம் இந்தியளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் 3 நாட்களில் பாஜக கோட்டையை சரித்து ஆட்சியையும்  கைப்பற்றி தான் ஒரு அரசியல் சாணக்கியர் என்பதை சரத் பவார் நிரூபித்தார். இதற்குப்பின் ஒரு இளம்பெண் இருந்த தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அஜித் பவார் பதவியேற்ற அன்று என்.சி.பி கட்சியை சேர்ந்த 4 எம்எல்ஏ-க்கள் காணாமல் போயினர். இதனால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. அவர்களை மீட்கும் பொறுப்பு என்.சி.பி மாணவர் அணித்தலைவர் சோனியா தூஹனுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் நால்வரையும் பாஜக பிடியில் இருந்து மீட்டு கட்சி தலைமையிடம் சோனியா நல்ல பெயர் எடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், '' பாஜக பிடியில் இருந்த எம்எல்ஏக்களில் ஒருவர் சரத் பவாருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய பின்னரே அவர்கள் சிக்கிய விவரம் எங்களுக்கு தெரிய வந்தது. அதன் பின்னர் அவர்கள் நால்வரும் ஹரியானாவில் உள்ள குருகிராம் ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு இருந்ததை தெரிந்து கொண்டோம். நாங்களும் அதே ஹோட்டலில் அறை எடுத்து தங்கினோம்.

அவர்களை ஷிப்ட் முறையில் பாஜகவினர் காவல் காத்தனர். எங்களுக்கு ஒரு இரண்டு முறை இரண்டு நிமிடங்கள் அவகாசம் கிடைத்தது. அதில் 2 எம்எல்ஏக்களை மீட்டோம். அவர்கள் இருவரையும் ஹோட்டலுக்குப் பின்னால் இருக்கும் கேட் வழியாக அழைத்து வந்து டெல்லியில் உள்ள சரத் பவார் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டோம். மூன்றாவதாக இருந்த எம்எல்ஏவை நேரடியாகச் சென்று மீட்டு அனைவர் முன்னிலையிலும் பகிரங்கமாக அழைத்து வந்தோம்.

அப்போதுதான் பெரும் சண்டை வெடித்தது. இருந்தும், அதைச் சமாளித்துக்கொண்டு மூவரையும் எப்படியோ டெல்லி கொண்டு சென்றுவிட்டோம். பின்னர் அங்கிருந்து நள்ளிரவு 2:40 மணிக்கு விமானம் ஏறி அதிகாலை 4:40 மணிக்கு மும்பையை வந்தடைந்தோம். காலை 5:10 மணிக்கு என்.சி.பி எம்.எல்.ஏ-க்கள் சரத் பவாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதன்பின் வேறு இடத்திலிருந்த நான்காவது எம்.எல்.ஏ-வும் மீட்கப்பட்டார்,'' என தெரிவித்து இருக்கிறார்.

எம்எல்ஏ-க்கள் மீட்பு ஆபரேஷனில் இருந்த ஒரே பெண் சோனியாதான் என்பதும் இவர்தான் அந்தக் குழுவை வழிநடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது அவர்மீது தீவிர அரசியலின் வெளிச்சம் பட்டிருக்கிறது.

Tags : #BJP #MUMBAI