‘கொரோனா தடுப்பூசி வரும்வரை’... ‘பள்ளிகளைத் திறக்க வாய்ப்பில்லை’... 'அதிரடியாக அறிவித்த மாநிலம்’...!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தொற்றுக்கான தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்கும் வரை பள்ளிகளைத் திறக்க வாய்ப்பில்லை என்று டெல்லி துணை முதல்வரும் கல்வித்துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவியதன் காரணமாக ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. நடப்புக் கல்வி ஆண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு நடத்தப்பட்டன. இதற்கிடையில், அக்டோபர் 15-ம் தேதி முதல், பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதுகுறித்து மாநில அரசுகளே முடிவுசெய்து கொள்ளலாம் என்று அறிவித்து, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது.
இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படுகின்றன. தொற்று அதிகரிப்பதைத் தொடர்ந்து மீண்டும் அவை மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்கும் வரை பள்ளிகளைத் திறக்க வாய்ப்பில்லை என்று டெல்லி துணை முதல்வரும் அம்மாநிலக் கல்வித்துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''நமக்குத் தடுப்பூசி கிடைக்கும் வரை டெல்லி பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இல்லை. இதுகுறித்துப் பெற்றோர்களிடம் இருந்து தொடர்ந்து கருத்துகளைக் கேட்டு வருகிறோம். பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டால் மாணவர்களுக்குப் பாதுகாப்பு இருக்குமா என்று அவர்கள் கவலையில் உள்ளனர்.
எங்கெல்லாம் பள்ளிகள் திறக்கப்பட்டதோ அங்கே குழந்தைகள் மத்தியில் கோவிட் தொற்று அதிகரித்துள்ளது. அதனால் தேசத்தின் தலைநகரத்தில் பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். மீண்டும் புதிய உத்தரவுகள் வரும் வரை பள்ளிகள் அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்'' என்று மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
