‘மணிக்கு 7 கி.மீட்டரில் இருந்து’... ‘11 கி.மீட்டராக அதிகரித்த வேகம்’... ‘எங்கெல்லாம் புயல் காற்று வீசக்கூடும்’... ‘வானிலை மையம் தகவல்’...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம், புதுச்சேரியை நோக்கி வரும் நிவர் புயலின் நகரும் வேகம் 11 கி.மீ. ஆக அதிகரித்துள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகி தீவிர புயலாக மாறியுள்ள ‛நிவர்' இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலின் வேகம் காலையில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிகர் புயல், தற்போது 11 கி.மீ. வேகத்தில் வேகமாக நகர்ந்து வருகிறது.
தென் மண்டல ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் கூறியதாவது, ‘நிவர் புயலானது, சென்னைக்கு தென் கிழக்கே 300 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரி தென் கிழக்கே 250 கி.மீ. தொலைவிலும், கடலூருக்கு தென்கிழக்கே 240 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. இது கடந்த 6 மணிநேரத்தில் 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
காற்றின் வேகம் 105 முதல் 115 கி.மீ. ஆக உள்ளது. இந்த புயல், இன்று மதியம் அதிதீவிர புயலாக வலுப்பெறும். வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும். இதனால், அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை தொடரும். அடுத்த 24 மணிநேரத்தை பொறுத்தவரை, கடலோர மாவட்டங்கள், வட மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஒரிரு இடங்களில் மிக கனமழையும், அதிகனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
புயல் கரையை கடக்கும் சமயங்களில், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுரை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மணிக்கு 130 கி.மீ. முதல் 140 கி.மீ. வரை காற்று வீசக்கூடும். சமயங்களில் 150 கீ.மீ. வேகத்தில் காற்று வீசும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்’ என்று அவர் கூறியுள்ளார்.