‘கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும்’... ‘இவங்களுக்குத்தான் முதல்கட்டமாக வழங்க திட்டம்’... ‘தீவிரமாக தயாராகும் பணிகள்’... ‘வெளியான தகவல்’...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும், நாடு முழுதும் உள்ள, ஒரு கோடி மருத்துவ பணியாளர்களுக்கு முதல் கட்டமாக வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில், அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. நம் நாட்டில், ஐந்து மருத்துவ நிறுவனங்களின் தடுப்பூசிகள், இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன. இதனால் 'அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள், தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துவிடும்' என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், “தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்ததும், நாடு முழுதும் உள்ள மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உட்பட ஒரு கோடி பேருக்கு, முதல்கட்டமாக தடுப்பூசி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான நபர்களை அடையாளம் பார்த்து பட்டியலை தயார் செய்யும்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரசேத அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதற்காக நாடு முழுதும் உள்ள, 92 சதவீத அரசு மருத்துவமனைகள் மற்றும் 55 சதவீத தனியார் மருத்துவமனைகளை சேர்ந்தவர்களின் விபரங்கள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களின் விபரங்கள் சேகரிக்கும் பணி, இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையும் என்றும் கூறப்படுகிறது. இந்த பணியை முடுக்கி விடும்படி, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக” மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதற்கு அடுத்தப்படியாக, இரண்டு கோடி மாநகராட்சி ஊழியர்கள், போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்படும். அதன்பின், உடல்நலக் கோளாறுகள் உள்ள 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும், 'கோமார்பிடைட்டீஸ்' எனப்படும், இரண்டுக்கும் அதிகமான நாள்பட்ட நோய் உள்ள 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என 26 கோடி பேருக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தற்போது 92 லட்சத்தை நெருங்கியுள்ளது.

மற்ற செய்திகள்
