4 கண்டத்தை தாண்டி உயிர் பிழைத்த நபர்.. கடைசியாக கொத்திய ‘ராஜநாகம்’.. டாக்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெங்கு, மலேரியா, கொரோனா மற்றும் ராஜநாகப்பாம்பு கடி என 4 கண்டங்களை கடந்து ஒருவர் உயிர்தப்பியுள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் ஐஸ்லி ஆப் வெயிட் தீவுப்பகுதியை சேர்ந்தவர் இயன் ஜோன்ஸ். இவர் இந்தியாவில் தங்கி தனது தொண்டு நிறுனம் சார்பில் ஏழைமக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். இவருக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அதில் தீவிர சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார். இதனை அடுத்து உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸும் இவரை விட்டு வைக்கவில்லை. சமீபத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான இயன் ஜோன்ஸ், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார்.
இந்நிலையில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜோதாபூர் மாவட்டத்தில் ஒரு வீட்டில் இயன் ஜோன்ஸ் தங்கி இருக்கிறார். அப்போது வீட்டின் பின்பகுதியில் இயன் ஜோன்ஸ் நின்றுகொண்டிருந்தபோது கொடிய விஷம் கொண்ட ராஜநாகம் இரண்டு முறை கடித்துள்ளது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இயன் ஜோன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜோன்சுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது ராஜநாகம் கடியில் இருந்து ஜோன்ஸ் மீண்டுள்ளார்.
ஆனால் அவரது உடலின் செயல்பாடுகள் குறைந்துள்ளதாகவும், பார்வை திறன் குறைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தற்காலிகமான ஒன்றுதான் என்றும், அவரின் உடல்நிலை இன்னும் சில நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்றும் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். டெங்கு, மலேரியா, கொரோனா வைரஸ் மற்றும் ராஜநாகப்பாம்பு கடி என 4 கண்டத்தில் இருந்து தப்பித்து இயன் ஜோன்ஸ் நம்பிக்கையுடன் தனது சேவையை தொடர்ந்துள்ளார்.

மற்ற செய்திகள்
