‘கொரோனா வைரஸ் 2-வது அலையால்’... ‘மீண்டும் அமல்படுத்திய ஊரடங்கை’... ‘வாபஸ் பெற திட்டமிட்டுள்ள நாடு’...!!!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தில் வரும் டிசம்பர் 2 ஆம் தேதியோடு நாடு தழுவிய ஊரடங்கை முடித்துக்கொள்ள, அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட ஐரோப்பாவில் நாடுகளில் ஒன்றாக பிரிட்டனும் இருந்து வருகிறது. அங்கு மார்ச் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது.
இதனை அடுத்து நாடு தழுவிய ஊரடங்குகளை அமல்படுத்திய பிரிட்டன் அரசு கொரோனா பரிசோதனைகளையும் துரிதப்படுத்தியது. இதனால் அங்குப் பாதிப்புகள் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டன. மேலும் கடந்த ஜூன் மாதம் முதல் அங்கு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர்.
சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு பிரிட்டனில் கொரோனாவின் இரண்டாம் அலை வீச தொடங்கியதால், அங்கு வைரஸ் பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து நவம்பர் 5 ஆம் தேதி முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வரும் டிசம்பர் 2 ஆம் தேதிக்குப் பிறகு நாடு தழுவிய ஊரடங்கை முடித்துக்கொள்ள போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவலில் நிலைத்தன்மை ஏற்பட்டதையடுத்து, இந்த முடிவுக்குப் பிரிட்டன் அரசு வந்துள்ளது. பிராந்திய அளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கவும் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொற்று பரவலின் தீவிரத்தன்மையை பொருத்து ஊரக அளவில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தத் திட்டமிட்டு இருப்பதாக போரிஸ் ஜான்சன் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதேபோல், அடுத்த மாதம் கோவிட் -19 தடுப்பூசியை நாடு தழுவிய அளவில் தொடங்குவதற்கான திட்டத்தையும் ஜான்சனின் அலுவலகம் உறுதிப்படுத்தியது. தடுப்பூசி செயல்பாட்டுக்கு வரும் வரையில், பெரிய அளவில் கொரோனா பரிசோதனைகளை நடத்தவும் பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது.

மற்ற செய்திகள்
