மகாத்மா காந்தியின் ‘கொள்ளுப்பேரன்’ கொரோனாவால் உயிரிழப்பு.. ‘3 நாளைக்கு முன்னாடிதான் பிறந்தநாள் கொண்டாடினாரு’.. உறவினர்கள் வேதனை..!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாத்மா காந்தியின் இரண்டாவது மகன் மணிலா காந்தியின் பேரன் சதீஷ் துபேலியா (66). இவர் தென் ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தார். இவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை ஊடகங்களில், குறிப்பாக வீடியோகிராஃபர் மற்றும் புகைப்படக் கலைஞராகக் கழித்தவர். தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் உள்ள பீனிக்ஸ் குடியேற்றத்தில் காந்தி மேம்பாட்டு அறக்கட்டளையை தொடங்கி மக்களுக்கு உதவி வந்தார். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சதீஷ் துபேலியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவரது சகோதரி உமா துபேலியா சமூக வலைதளத்தில் பதிவிட்ட பதிவில், ‘நிமோனியா காய்ச்சலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எனது சகோதரர் சதீஷிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரு மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், நேற்று மாலை அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்’ என பதிவிட்டுள்ளார். இந்தநிலையில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் சதீஷ் துபேலியாவின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன்னர்தான் சதீஷ் துபேலியா தனது 66-வது பிறந்த நாளை கொண்டாடியதாகவும், அவரது மரணம் மிகுந்த வேதனை அளிப்பதாகவும் உறவினர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
