'எதுவும் செய்யாமலேயே கங்கை சுத்தமானது...' 'பல ஆயிரம் கோடிகளால் சாதிக்க முடியாததை...' 'கொரோனா 10 நாட்களில் சாதித்தது...'
முகப்பு > செய்திகள் > இந்தியாஊரடங்கு உத்தரவால், கங்கை நதியின் தரம் மேம்பட்டுள்ளதாக, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
கங்கை நதி அதன் புனிதத்தினாலும், கலாச்சார மகிமைக்காகவும் மட்டும் முக்கியத்துவம் பெறவில்லை, இந்த நதி நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு வாழ்வளிப்பதாலும் அது முக்கியத்துவம் பெற்றதாகிறது. எனவே கங்கையை சுத்தப்படுத்துவதை ஒரு பொருளாதார நிகழ்வாக பிரதமர் அறிவித்தார்.
பிரதமரின் இந்த கூற்றை நனவாக்கும் வகையில் இந்திய அரசு கங்கையை சுத்தப்படுத்தி மாசுகளை அகற்றும் பெரும் திட்டமான நமாமி கங்கை திட்டத்தை அறிவித்தது. 2019-20ம் ஆண்டிற்குள் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இத்திட்டத்தினை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
கங்கையை புனரமைப்பதில் பல்துறை சார்ந்த சவால்கள் இருக்கின்றன என்பதை உணர்ந்து பல்வேறு அமைச்சகங்களின் ஒத்துழைப்புடன் மத்திய மாநில அரசுகளின் ஒருங்கிணைப்புடன் செயல்திட்டம் தயாரிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆரம்பகட்ட பணிகள், இடைநிலை பணிகள், நீண்டகால பணிகள் என்று பிரிக்கப்பட்டு இந்த திட்டத்தை செயல்படுத்தும் முதல்கட்டப் பணிகள் தொடங்கின.
இது தவிர தூய்மை கங்கை திட்டத்தின் கீழ் 30 ஆயிரம் ஏக்கரில் காடு வளர்க்கும் திட்டமும் 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வளவு திட்டங்கள் தொடங்கப்பட்ட போதும், கங்கை தொடர்ச்சியாக மாசுபடுதல் குறைந்தபாடில்லை.
இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவல் நாட்டில் அதிகரித்ததையடுத்து, நாடு முழுவதும் மத்திய அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.
ஊரடங்குக்கு முன், உத்தரகண்ட் மற்றும் உத்தர பிரதேசத்தில், நதி நுழையும் இடம் தவிர மற்ற அனைத்து இடங்களிலும், கங்கை நதி, குளிப்பதற்கு கூட தகுதியற்றதாக இருந்தது. தற்போது, நதி பாயும் தடத்தில், 36 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 27 இடங்களில், குளிப்பதற்கும், நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கும் உகந்ததாக, கங்கை மாறியுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக கங்கையில், தொழிற்சாலைகள் கழிவுகள் கலப்பது தவிர்க்கப்பட்டுள்ளதால், நதி நீர் மேம்பட்டுள்ளதாக, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.
இதன் மூலம் கங்கை தன்னைத் தானே சுத்தப்படுத்திக் கொண்டுள்ளது என்பது வெளிப்படையாக தெரிகிறது. மனிதர்கள் எதுவும் செய்யாமல் இருந்தாலே இயற்கை இயற்கையாக சுத்தமாக இருக்கும் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தும் செய்ய முடியாத சுத்தப்படுத்தும் பணிகளை கொரோனா 10 நாட்களில் செய்து முடித்து சாதித்துள்ளது என்பதே உண்மை...